சனி, 2 ஆகஸ்ட், 2014

கிராமத்து பேருந்து

மெலிதாய் சடசடத்த ,
மழையில் நனைந்தபடி,
வந்து நின்றது,
எங்கள் கிராமத்து பேருந்து..

நரக நகர பகுதிகளில்,
அலுவல் முடித்து விட்டு,
இந்த இரவு நேர,
கடைசி பேருந்தில்,
எங்கள் கிராமம் செல்வது,
வழக்கம்..

தூக்க கலக்கத்தில்,
பேருந்து,
நகர பேருந்து நிலையம் விட்டு,
புறப்பட ஆயத்தமானது..

பேருந்து நிலையத்தை விட்டு,
வெளியே வருகையில்,
மிச்ச சொச்ச ஆட்களும்,
ஏறிக்கொள்ள,
எங்கள் கிராமம் நோக்கி,
நகர தொடங்கியது,
பேருந்து..

சற்றே மத்திய தரத்தில்,
எங்கள் பேருந்து..

நகர விளக்குகள்,
மெல்ல பின்னோக்கி,
மறைந்திட,
கிராமத்து சாலை பிடித்து,
பயணிக்க துவங்கியது,
கிராமத்து பேருந்து..

உலகின் எத்தனையோ,
சொகுசு பயண வசதிகள்,
வந்தாலும் கூட,
இந்த கிராமத்து பேருந்தில்,
இரவு நேரத்தில்,
அதுவும் மெல்லிய மழைசாரல்,
காலத்தில் பயணிப்பதன்,
சுகம் கிடைக்காது..

சுற்றிலும் தெரிந்த முகங்கள்,
இதில் சில சொந்த பந்தங்கள்,
வேறு...

வயது வித்தியாசம் இன்றி,
சகஜமாய் கிராமத்து,
சொந்தங்களுடன் பயணம்,
தொடர்கிறது..

கிராமத்து பிணைப்பில்,
சக கிராமத்தை சேர்ந்த,
நடத்துனரும், ஓட்டுனரும்,
எங்களோடு அரட்டையில்,
கலந்தபடி பயணிக்க,
சின்ன சின்ன மேடு பள்ளங்களில்,
இறங்கி ஏறியபடி,
பயணம் தொடர்கிறது..

பரிச்சயம் அனைவரும்,
அனைவருக்கும்...
இதுதான் இந்த கிராமத்து,
பேருந்து பயணத்தின்,
பலம், சுகம் எல்லாமே..

ஒவ்வொரு கிராமமாய்,
பேருந்து நிற்கையில் ,
சடசடத்த மழையில்,
இறங்கி செல்கின்றனர்,
பயணிகள்..

ஓரளவிற்கு கூட்டம்,
குறைந்த நிலையில்,
சடசடத்த மழையின்,
சப்தம் ரசித்தவாறு,
சற்றே மோசமானதொரு,
சாலையில்,
குலுங்கியபடி,
விரைகிறது எங்கள் பேருந்து..

நடத்துனர் அன்றைய,
தின கணக்கு வழக்குகளை,
தீர்ப்பதில்,
மும்முரமாய் இருக்க,
ஓட்டுனர் இறுதி ட்ரிப்,
என்பதால்,
சற்றே உற்சாகமாய்,
வேகம் பிடிக்கிறார்..

மெல்ல எங்கள் கிராமத்தின்,
தெரு விளக்குகள் தூர,
தெரிய,
இரவு நேரத்தின்,
கடைசி பேருந்து,
நின்றது,
எங்கள் கிராமத்து பேருந்து,
நிலையமான,
ஆலமரத்தடியில்..

நீண்ட பெருமூச்சொன்றை,
விட்டு ஓய்வெடுக்க துவங்கியது,
பேருந்து..

சற்று திரும்பி பார்க்கையில்,
என்னை சுமந்த,
அந்த பேருந்தின் கம்பீரம்,
என்னை வசீகரிக்க,
ஏதோ ஒரு இனம் புரியா,
உணர்வொன்று,
எனக்கும் பேருந்துக்கும்,
இடையில்..

ஏதோ ஒரு பந்தம்,
உணர்த்தியபடி,
எங்கள் கிராமத்து பேருந்து,
நிற்க,
நான் நெகிழ்ந்து போனேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக