வியாழன், 4 செப்டம்பர், 2014

** நினைவுகள் **


எண்பதுகளில் ஓர் நாள்..
பள்ளி பருவத்தின் மத்திம நாட்கள்..
அழகிய மலை மாவட்டத்தில்,
ஒரு கிறித்துவ பள்ளியில்,
தமிழ் வழி கல்வி பயின்று வந்தேன் ..

அந்த பள்ளியில்,
அனைவரும் ஆசிரியைகள்..

கண்டிப்பான, அதே சமயம்,
உண்மையான தூய உள்ளம் கொண்ட ,
ஆசிரியைகள் அவர்கள்..

எட்டாம் வகுப்பு வரை,
இருந்த அந்த பள்ளியில்,
நன்னெறி வகுப்புகள் இல்லாமல்,
ஒவ்வொரு நாளும் பாடம் துவக்கியதில்லை..

எட்டாம் வகுப்பு வரை படித்த,
அந்த பள்ளியில்,
ஒவ்வொரு வகுப்பிலும்,
எங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த ,
ஆசிரியைகளை மறக்கவே முடியாது..

அதில்,
ஏழாம் வகுப்பு ஆசிரியை அவர்களை,
மறக்கவே முடியாது..

அவருக்கு ரெண்டு குழந்தைகள்,.
மூத்தவன் பள்ளியில் படிக்க,
இரண்டு வயதில், ஒரு கைக்குழந்தை..

அவர் கணவர்,
சிறு உணவகம் நடத்தி வந்தார்..

இங்கு பள்ளியில்,
தினம் நடக்கும் நிகழ்வுகள்,
ஒவ்வொன்றும்,
என் பெற்றோருக்கும் தெரியும்..

அத்தனை உன்னதமாக,
பெற்றோர் ஆசிரியர்,
உறவு இருந்தது.. அன்று..

ஏதாவது பாடத்தில்,
சரியாக படிக்க வில்லையென்றால்,
விடுமுறை நாட்களில்,
ஆசிரியை வீட்டிற்கு செல்ல வேண்டும் ..

அந்த ஆசிரியை வீட்டிற்கு,
அருகிலேயே அவர்கள் உணவகம்,
இருந்தது..
வீட்டில் இருந்துதான் பலகாரங்கள்,
உணவகத்திற்கு செல்லும்..
கூடவே, கைகுழந்தையையும் ,
கவனித்த படி,
எங்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பார்.

அர்பணிப்பு உணர்வுடன்தான்,
பாடம் சொல்லி கொடுப்பார்..
எந்தவித கட்டணமும்,,
வாங்கி கொள்ள மாட்டார்..

தேநீர், பலகாரங்கள் அவ்வப்போது,
எங்களுக்கும் கொடுத்தபடி,
நாங்கள் படிப்பதை,
கவனித்தபடி இருப்பார்..

சரியாக வீட்டுப்பாடங்கள்,
முடித்தபின்தான்,
எங்களை வீட்டிற்கு அனுப்புவார்..

அடியும் விழும்,
அன்பும் இருக்கும்..
அப்படி ஒரு அர்பணிப்பு ஆசிரியை,
அவர்..
அவர் மட்டுமல்ல,
அந்த பள்ளியில் அன்றைய,
ஆசிரியைகள் அனைவருமே அப்படித்தான்,
இருந்தார்கள்..

ஒருமுறை,
அந்த ஆசிரியையின்,
குழந்தைக்கு,
உடல் சுகவீனம் காரணமாக,
மருத்துவமனையில்,
அனுமதிக்கபட்டிருந்தது...

நாங்கள் சிறுவர்கள்,
இருந்தாலும்,
ஆசிரியையின் மகனை,
பார்க்க,
மருத்துவமனைக்கு செல்ல,
முற்பட்டோம் .

தலைமை ஆசிரியையிடம்,
கூறாமல்,
சற்றே தொலைவில் இருந்த,
அந்த மருத்துவமனைக்கு,
பயணப்பட்டோம்..

அரைமணி நேரம் நடந்து,
குழந்தையை பார்த்து விட்டு,
வந்தோம்..

திரும்ப பள்ளிக்கு,
வந்ததும்,
தலைமை ஆசிரியை, மற்றும்,
சில ஆசிரியைகள்,
கையில் பிரம்போடு நிற்க,
வெலவெலத்து போனோம்..

பள்ளி மைதானத்தில்,
முட்டி போட வைத்து,
எங்களிடம் சொல்லாமல் ஏன் சென்றீர்கள்,
என்று அடித்து வெளுக்க ஆரம்பித்தனர்..

பிறகு,
மறுநாள் உங்கள் பெற்றோருடன்தான்,
வரவேண்டும் என்று ஆணையிட,
நாங்கள் பயந்து போனோம்.

பயந்து நடுங்கியபடி,
அடியை எதிர்பார்த்து
என் தகப்பனிடம் கூற,
அவரோ,
'இனிமேல் எங்க போனாலும், தலைமை ஆசிரியையிடம் சொல்லிட்டு,
போகணும்" என்று மட்டும் கூறிவிட்டு அமைதியாக இருந்தார்..

எனக்கு ஆச்சரியம்.. அந்த வயதில் ஒன்றும் புரியவில்லை..

மறுநாள்,
பள்ளிக்கு வந்தேன், என் தந்தையுடன்,
சக மாணவர்களும் அவ்வாறே..

இதில் ஒரு சில மாணவ, மாணவிகளின்
பெற்றோர்கள்,
அங்கேயே தங்கள் பிள்ளைகளை அடித்து துவைத்தனர்.

அந்த நேரம் பார்த்து,
அங்கு வந்த ஆசிரியை,
அழுத அழுகை இன்னும் என் நினைவில்,
இருக்கிறது..

" என் மகனை பார்க்க வந்து,
இப்படி அடி வாங்குகிறார்களே " என்று கதறினார் ..

அந்த அளவுக்கு, எங்கள் மீது பாசம் வைத்திருந்தார் அந்த ஆசிரியை..

பிறகு, பெற்றோர், சம்பிரதாய கடிதம் எழுதி கொடுக்க ,
அந்த பிரச்சினை முடிந்தது ..

பிறகு, ரெண்டொரு நாளில்,
வழக்கம் போல்,
வகுப்புக்கு வந்து,
பாடம் எடுக்க துவங்கியபோது,
சட்டென்று என்னை அழைத்தார்,
" அப்பா , அன்னைக்கு வீட்டுக்கு போய்,, உன்னை அடிச்சாரா " என்று கேட்டார்..
நான் " இல்லை டீச்சர் " என்றதும்,
அவருக்கு மகிழ்வு..
அதேபோல, ஒவ்வொருவரையும் விசாரித்தார்.

காலம் பல கடந்து,
வருடங்கள் உருண்டோட,
கல்லூரி காலங்களையும் முடித்து,
வேலை நாட்களில் இருந்த,
ஒரு நாள்,
அந்த ஆசிரியை அவர்களை,
எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தது..

வருடங்கள் பல ஆனதால்,
என்னை மறந்திருப்பார்,
என்று எண்ணி,
தயங்கி விலக எத்தனித்த போது,
" என்னப்பா, பெரிய மனுஷன் ஆனா,
பேசமாட்டியா ? " என்று கேட்டதும்,
திடுக்கிட்டு நெகிழ்ந்து போனேன்..

பிறகு என் அப்பா, அம்மா, என் குடும்பத்தை,
விசாரித்தார்..
நான் நெகிழ்ந்து போனேன்..

இன்று,
இன்னும் சில காலம் கடந்து,
நினைத்து பார்க்கிறேன்,
அந்த சம்பவத்தை..

" மீண்டும் ஒரு முறை,
மனிதனாய் பிறக்கும் வாய்ப்பு கிடைத்தால்,
அந்த ஆசிரியையிடமே,
நான் படிக்கும் வாய்ப்பை,
அந்த இறைவன் அருள வேண்டும் "

இறைவனை வேண்டுகிறேன்.. இந்த நிமிடம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக