வெள்ளி, 25 ஜூலை, 2014

அவள்...


படபடவென்று,
உடல் நடுங்கியது..
உடல் அனலாய்,
கொதிக்கிறது..

ஓயாத உழைப்பை,
சுமக்கிற உடல்,
சற்றே ஓய்வு,
வேண்டும் என்று,
கதறுகிறது..

படுக்கையை விட்டு,
எழுந்தேன்..

ஜன்னலை திறந்தேன்,
அருகிலிருந்த,
மரத்தின் கிளை,
ஒன்றில்,
அருகி வரும்,
சிட்டு குருவி ஒன்று,
நனைந்த உடலோடு,
அமர்ந்திருந்தது..

மழை இப்போதுதான்,
விட்டிருக்கும் போல்..

ஈரம் உள்வாங்கி,
மினுமினுத்தது பூமி..

மெல்ல நடுக்கம்,
அதிகரிக்க மீண்டும்,
படுக்கையில் வீழ்ந்தேன்.

காய்ச்சல் அனலாய்,
கொதித்தது..
மருத்தவரிடம் செல்ல,
வேண்டும்..

சிறை வாழ்க்கையை,
விட கொடிய,
சிறைக்குள் நானும்,
தனிமையும்..

பல நேரங்களில்,
தனிமையை துரத்திவிடுகிரார்கள்..
இருக்கும் சில நேரங்களில்,
மட்டும் தனிமை,
துணை..

இந்த பூமி,
இந்த வாழ்வியல்,
விசித்திரமாக தோன்றியது.

எல்லாரும் பிறக்கிறார்கள்,
பணக்காரனாக,
ஏழையாக,
சமவெளி பகுதிகளில்,
குளிர்பிரதேசங்களில் ,
என்று..

நானும் பிறந்தேன்,
இந்த நெருக்கமான,
தெருவில்,
அதுவும் பெண்ணாக..

அதுவும் தகப்பன்,
எவனோ தெரியாது..

என் தாய் இங்குதான்,
இருந்தாள்..

என் குழந்தை பருவத்தில்,
என் தாய்,
மிகவும் வேதனை கலந்த,
ஒரு வாழ்க்கையை,
அனுபவித்து கொண்டிருந்தாள்..

தினம் தினம்,
புதிது புதிதாய்,
ஆண்களை சந்திக்கும்,
வேலை..

எனக்கு பருவ,
வயது எட்டியதாக,
ஒரு நாள்,
கூறினார்கள்,
சிலர்..

எனக்குள் இருந்த,
மழலை குணத்தை,
அவர்கள் உணரவில்லை.

என் தாய்க்கு,
விடுதலை,
கொடுத்தார்கள்..

தொடர்ந்த விடுதலையில்,
இந்த பூமியை,
விட்டும் சென்றுவிட்டாள்,
என் தாய்.
எனக்கு தொடர்ந்தது,
இந்த வேதனை,
வாழ்க்கை.

உடல் வலிக்கிறது,
தாயின் மடி மீது,
படுத்து அரற்ற வேண்டும்,
போலிருக்கிறது..

நினைப்பதெல்லாம் நடந்திட,
நான் சாதாரண பெண்ணில்லை.
இரக்கமற்ற, ஆண்களின்,
பசி தீர்ப்பவள்.

உண்மையில்,
யாருமில்லைதான்,
எங்களை போன்றவர்களுக்கு.

அரசாங்கமும் இல்லை,
சக மனிதர்களும் இல்லை.
நாங்கள் ஒரு இச்சை பொருள்..

இனி,
இன்று எவன் எவனோ,
என்னை ஆள போகிறான்.

நான் உணர்வின்றி,
கிடக்க போகிறேன்..

இயலாமை ஒன்று,
என் உதட்டோரம்,
வெறுமை புன்னகையாய்,
குடி கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக