சனி, 2 ஆகஸ்ட், 2014

உரையாடல்

இரவின்
இரண்டாவது ஜாமத்தில்
நின்றிருக்கிறேன்
தனித்து.

அடர் வனம் ஒன்றின்
மைய பகுதியில்
நின்று
வானம் பார்க்கிறேன்..

நீண்டு விரிந்த
நீள் வானம்
மிக அமைதியாய்
இருந்தது..

வானத்தின் சப்தம்
கேட்க முயற்சிக்கிறேன்..

நிசப்தம் தவிர
எதுவுமில்லை அங்கே..

கருமை பூசிய
வானில்
முழு நிலவின்
உபயத்தால்
ஆங்காங்கே மிக மெல்லிய
வெண்மை நிறத்தில்
மேக தீற்றல்கள்.

இடைப்பகுதிகளில்
கண்சிமிட்டும்
விண்மீன்கள் வெகு அழகாய்.

வெகு தொலைவில்
வானம்..
அதை தாண்டி
வெகு தொலைவில்
பிரபஞ்சம்.

நான் தனித்து
இங்கே பூமியில்
ஒரு வனத்தில்..

இனி ,
உரையாடல் துவங்கும்
எனக்கும்,
பிரபஞ்சத்தின் எங்கோ
ஒரு மறைவில் இருந்து,
இயங்கும்,
இறைவனுக்கும்..

இங்கே வானின் நிசப்தம்
வெகு அழகாய்
துணை நிற்கும்,
இறைவனோடு, உரையாடல்,
முற்று பெரும் வரை.

இங்கே மனிதர்கள்
விழிக்கும் முன்னே
முற்று பெற்றாக வேண்டும்
என்ற தவிப்பில்
அழகிய உரையாடலுக்கு
ஆயத்தமாகிறேன்
இறைவனுடன்..

காதல் துளிகள்


** காதல் துளிகள் **

என் இதயம்,
உன்னிடத்தில்,
உன் இதயம்,


என்னிடத்தில்..

**
என் விழிகளுக்குள் புகுந்து,
என் கனவுகளை,
ஆட்சி செய்கிறாய்
தினமும்..

**
என் ஓய்வு நிமிடங்கள்,
உன் நினைவுகளில்,
சங்கமம்..

**
ஒரு மழைத்தூறலில்,
உன்னோடு நனைந்திடவேண்டும்,
என்பது,
என் நெடுநாள் விருப்பம்..

**
உன்னை விரும்புகிறேன்,
என்று ஒவ்வொரு முறை,
உன்னிடம் சொல்லும்போதும்,
நான் புதிதாய்,
பரவசமாகிறேன்..

**
காதல் பொழுதுகளை,
பேரன்பு பொழுதுகளாய்,
மாற்றி காட்டுகிறாய்,
ஒவ்வொரு முறையும் ..

**
நீ இன்றி,
என் வாழ்வியல் சூன்யமே..

**
தப்பி தவறி,
தனிமையை பரிசாய்,
தந்துவிடாதே பெண்ணே..

**
அழகான வீடு,
சுற்றிலும் நந்தவனம்,
அழகான நீ,
அன்பான இரு குழந்தைகள்,
என என் கனவுகள்,
எப்போதும் இதம்..

கிராமத்து பேருந்து

மெலிதாய் சடசடத்த ,
மழையில் நனைந்தபடி,
வந்து நின்றது,
எங்கள் கிராமத்து பேருந்து..

நரக நகர பகுதிகளில்,
அலுவல் முடித்து விட்டு,
இந்த இரவு நேர,
கடைசி பேருந்தில்,
எங்கள் கிராமம் செல்வது,
வழக்கம்..

தூக்க கலக்கத்தில்,
பேருந்து,
நகர பேருந்து நிலையம் விட்டு,
புறப்பட ஆயத்தமானது..

பேருந்து நிலையத்தை விட்டு,
வெளியே வருகையில்,
மிச்ச சொச்ச ஆட்களும்,
ஏறிக்கொள்ள,
எங்கள் கிராமம் நோக்கி,
நகர தொடங்கியது,
பேருந்து..

சற்றே மத்திய தரத்தில்,
எங்கள் பேருந்து..

நகர விளக்குகள்,
மெல்ல பின்னோக்கி,
மறைந்திட,
கிராமத்து சாலை பிடித்து,
பயணிக்க துவங்கியது,
கிராமத்து பேருந்து..

உலகின் எத்தனையோ,
சொகுசு பயண வசதிகள்,
வந்தாலும் கூட,
இந்த கிராமத்து பேருந்தில்,
இரவு நேரத்தில்,
அதுவும் மெல்லிய மழைசாரல்,
காலத்தில் பயணிப்பதன்,
சுகம் கிடைக்காது..

சுற்றிலும் தெரிந்த முகங்கள்,
இதில் சில சொந்த பந்தங்கள்,
வேறு...

வயது வித்தியாசம் இன்றி,
சகஜமாய் கிராமத்து,
சொந்தங்களுடன் பயணம்,
தொடர்கிறது..

கிராமத்து பிணைப்பில்,
சக கிராமத்தை சேர்ந்த,
நடத்துனரும், ஓட்டுனரும்,
எங்களோடு அரட்டையில்,
கலந்தபடி பயணிக்க,
சின்ன சின்ன மேடு பள்ளங்களில்,
இறங்கி ஏறியபடி,
பயணம் தொடர்கிறது..

பரிச்சயம் அனைவரும்,
அனைவருக்கும்...
இதுதான் இந்த கிராமத்து,
பேருந்து பயணத்தின்,
பலம், சுகம் எல்லாமே..

ஒவ்வொரு கிராமமாய்,
பேருந்து நிற்கையில் ,
சடசடத்த மழையில்,
இறங்கி செல்கின்றனர்,
பயணிகள்..

ஓரளவிற்கு கூட்டம்,
குறைந்த நிலையில்,
சடசடத்த மழையின்,
சப்தம் ரசித்தவாறு,
சற்றே மோசமானதொரு,
சாலையில்,
குலுங்கியபடி,
விரைகிறது எங்கள் பேருந்து..

நடத்துனர் அன்றைய,
தின கணக்கு வழக்குகளை,
தீர்ப்பதில்,
மும்முரமாய் இருக்க,
ஓட்டுனர் இறுதி ட்ரிப்,
என்பதால்,
சற்றே உற்சாகமாய்,
வேகம் பிடிக்கிறார்..

மெல்ல எங்கள் கிராமத்தின்,
தெரு விளக்குகள் தூர,
தெரிய,
இரவு நேரத்தின்,
கடைசி பேருந்து,
நின்றது,
எங்கள் கிராமத்து பேருந்து,
நிலையமான,
ஆலமரத்தடியில்..

நீண்ட பெருமூச்சொன்றை,
விட்டு ஓய்வெடுக்க துவங்கியது,
பேருந்து..

சற்று திரும்பி பார்க்கையில்,
என்னை சுமந்த,
அந்த பேருந்தின் கம்பீரம்,
என்னை வசீகரிக்க,
ஏதோ ஒரு இனம் புரியா,
உணர்வொன்று,
எனக்கும் பேருந்துக்கும்,
இடையில்..

ஏதோ ஒரு பந்தம்,
உணர்த்தியபடி,
எங்கள் கிராமத்து பேருந்து,
நிற்க,
நான் நெகிழ்ந்து போனேன்..

என் பயணம்


இந்த அழகிய உலகிற்குள் ,
என் பயணம் துவங்கி,
நீண்ட வருடங்களாகி,
விட்டது..

இன்னும் முற்று பெறாமல்,
தொடர்கிறது என் பயணம் .

என் தொடக்க காலத்து,
பயணங்களில்,
நான் பரவசத்தோடு,
ரசித்திருக்கிறேன்..

வியந்திருக்கிறேன்,
இந்த பூமியின் பேரழகை கண்டு..

எல்லாமே எனக்குள்,
ஆச்சரியத்தை விளைவித்தன..

நாட்கள் செல்ல, செல்ல,
பயணங்கள் தொடர தொடர,
மெல்ல சலிப்பொன்று,
உட்புக,
பயணம் ஏனோ,
கசந்தது..

போகிற போக்கில்,
நினைத்தவை யாவும்,
கைப்பற்றி விட்டால்,
இனிக்கும் பயணம்,
கைக்கு எட்டாததை நினைத்து,
துயரப்பட வைக்கிறது..

சற்றே ஓய்வு எடுத்து,
நிற்கிறேன்..

இந்த பயணம் என்னை,
எங்கு கொண்டு செல்லும்,
என்று தெரியும்..

அதை நான் உணர்ந்திருக்கிறேன்.
அதுவரை இந்த நீண்ட,
பயணம் சுலபமல்ல,
என்றும் தெரியும்..

உடன் பயணித்தவர்கள்,
ஒவ்வொருவராய் உதிர்ந்து கொண்டே வர,
புதிய பயணிகள்,
ஒவ்வொருவராய் அறிமுகமாக,
நான் தொடர்கிறேன் என் பயணத்தை,
என் உதிர்தல் நோக்கி..

சில கடமைகளுக்காக,
இன்னும் உதிராது,
இருக்கிறேன் போலும்..

நான் உதிர்ந்து போகாமல்,
இருக்கும்வரை,
உங்களோடு,
இணைந்திருக்கும் என்,
பயணம்..

என்னை இயக்குபவன்,
என்னை செலுத்தி கொண்டிருப்பவன்,
யாரோ,
அவனுக்கு என் நன்றி..

விதவிதமாய் மனது..


**
விதவிதமாய் மனது.. ஒரு தொகுப்பு **

சிறு தூறல்,
குளிர் இரவு,
ஆழ்ந்த நிசப்தம்,
அழகிய கவிதை
இதம்..

**
சில நேரங்களில்,
பிரபஞ்ச பெரு வெளியில்,
திரிகிறேன்..

மரணத்தின்,
ஒத்திகை.. ?!!

**
பிறிதொரு மழை,
நாளில்,
மரங்களடர்ந்த வனத்தில்,
சருகுகள் சூழ,
மரணித்து இருப்பேன்..

**
ஆழ்நிலை உறக்கம்,
என்றாவது,
ஒரு நாளில் எனக்கு,
கிடைக்கும் பொழுதில்,
மரணம் உணர்வேன்..

**
எக்காளமிட்டு,
சிரிக்க தயாராய்,
என்றும் சமூகம்..

**
என் வியர்வை,
என் மகிழ்வு..

சமூகம்
நகைத்தால்
எனக்கென்ன..

**
உற்சாகம் நீர்த்து,
போகையில்,
இளமை தீர்ந்து,
விடுகிறது.

**
சிறு மழைத்துளிகள்,
மெல்ல,
பெரு வெள்ளப் பிரவாகமாய்,
உருவெடுக்க,
கால் நனைத்த நதியில்,
முற்றிலுமாய் மரணித்து,
போயிருந்தேன்..