சனி, 26 ஜூலை, 2014

* வலியுணர் காதல். *

அவளுக்கு என்னை,
மிக பிடித்திருக்கிறது,
என்பதை உணர்ந்தேன்...

எனக்கும்,
அவளை தொடர்தல்,
பிடித்திருந்தது..

இற்றை நாள் போலல்ல,
அற்றை நாட்கள்.

பேச தயக்கம்..
பொதுவாகவே,
மௌனம்தான் காதல்,
வளர்க்கும்,
அற்றை நாட்களில்..

ஒரு பேருந்து பயணத்தில்,
என்னை, அவள்,
கவனித்ததை உணர்ந்து,
மெய்சிலிர்த்த வினாடிகள்,
இன்னமும்,
என் நினைவுகளில் பசுமையாய்..

வானம் வசப்பட்டதை,
போன்றொரு உணர்வில்,
மிதந்தேன்..

காதல் ஒரு அழகிய,
உணர்வு என்பதை,
உணர்ந்தேன்..

இருப்பினும்,
பேசுவதற்கு பெரும்,
தயக்கம்..

தயக்கம் தொடர,
நாட்களும் தொடர,
காதலும் மெல்ல,
தொலைந்தது போன்றொரு,
பிரமை..

சூழல் நெருக்கடிகளில்,
சிக்கி,
உழைப்பை மூலதனமாய்,
வைத்து,
பொருள் தேடி,
பயணப்பட்டு, சில காலம்,
கழித்து ஆவலாய்,
வீடு திரும்பினேன்..

மேஜையில்,
என்னை பார்த்து,
படபடத்து சிரித்தது,
அவளின் திருமண,
பத்திரிக்கை..

அந்த வினாடிகளில்,
உடலின் அதிர்வுகள்,
இன்னமும் எனக்குள்,
நினைவுகளாய் இருக்கிறது..

காரணம் எதுவோ,
அவளை திருமணத்தில்,
வீழ்த்தி இருந்தது..

சற்றே காலம்,
காதலை மறக்கடித்த,
வேளையில்,
யாரோ ஒரு பெண்ணுடன்,
எனக்கு திருமணம்..

பிடித்திருக்கிறதோ இல்லையோ,
எனக்கே தெரியவில்லை..
ஏதோ வாழ்க்கை பயணத்தில்,
இன்று நான்..

சில கால இடைவெளிக்கு,
பின்,
ஒரு நாள்,
நான் பயணித்த பேருந்தில்,
அவள் முன் இருக்கையில்..

ஒரு பேருந்து நிறுத்தத்தில்,
அவள்,
மௌனமாய் இறங்கி,
சென்றாள்..

நான் மௌனமாய்,
சலனமற்று இருந்தேன்..

காதல்,
நினைவுகளை மட்டுமே,
பரிசாய் விட்டு செல்லும்..

அந்த பரிசு,
வலி மிக்கது.. .

இளமையில்,
காதல் இல்லாதிருத்தல்
சிறப்பு..

** நினைவுகள் **

** நினைவுகள் **

அந்த,
சீனத்து பெண்,
என்னை வசீகரித்தாள்..

அழகான உதடுகளில்,
சிறு புன்னகை உதிர்த்தபடி,
சிநேகமாய்,
என்னருகே வந்து அவள்,
நின்ற பொழுதில்,
வியர்த்து, படபடத்தேன்..

என் பதட்டம்,
அவளுக்கு பிடித்திருந்தது
போலும்..

நான் அயல் தேசத்தில்,
இருந்த நாட்களில்,
ஒரு விடுமுறை நாளில்,
ஒரு பேருந்து நிலையத்தில்,
நடந்த நிகழ்வு இது..

அந்த சீன பெண்,
நெருங்கி வந்த பொழுதில்,
நிஜமாகவே வியர்த்து,
போனேன்..

அவள் என் பதட்டம்,
ரசித்தபடியே,
பேச துவங்கினாள்,
உடைந்த ஆங்கிலத்தில்..

அவளின் ஆங்கிலத்தை விட,
என் ஆங்கிலம்,
இன்னும் வெகுவாய்,
உடைந்திருந்தது...

"உன் பெயர் என்ன ?" என்று துவங்கினாள்..
என் பெயர் கூறினேன்..
"அப்படி என்றால் என்ன ?" என்றாள்..
"அது ஒரு ஞானியின் பெயர்" என்றேன்..

அடுத்த கேள்வியை வீசினாள்,
சிநேக புன்னகையை உதிர்த்தபடி..
"இங்கே எப்போது வந்தாய் ?"
" இரு மாதங்களுக்கு முன்.." என்றேன்..

"எத்தனை வருடம் இங்கிருப்பாய் ? "
" இரண்டு வருடம்"என்றேன்..

" இந்த தேசம் பிடித்திருக்கிறதா ?" என்றாள்..
" மிகவும் பிடித்திருக்கிறது.." என்றேன்..

மெல்ல, மெல்ல,
அவள் என்னை கவர்ந்தாள்..

" பிறகு ?" என்றாள்..
" என்ன ?" என்றேன்
" இரண்டு வருடம் முடிந்தவுடன்?" என்றாள்..
" இந்தியா சென்று விடுவேன்.." என்றேன்..

" ஏன் இங்கிருக்க பிடிக்கவில்லையா.?"
" இல்லை, இரண்டு வருடம்தான் எனக்கு அனுமதி.. "என்றேன்..

சற்றே மௌனமாய் இருந்து,
பிறகு கேட்டாள், மெலிதாக,
" என்னை பிடித்திருக்கிறதா ?"

நான் ஒரு வினாடி,
யோசித்தேன்..
" பிடித்திருக்கிறது " என்றேன்..

அவள் முகம்,
மலர்ந்ததை கவனித்தேன்..

ஏதோ ஒரு தேசத்தில்,
வேறு வேறு தேசத்தை,
சேர்ந்த நாங்கள்..

உடைந்த மொழியில்,
எங்கள் இருவருக்கிடையே,
ஒரு அழகான பேரன்பு,
மலர்ந்த அந்த வினாடிகளில்,
பேருந்து சரியாக,
வந்து நின்றது..

" சரி நான் வருகிறேன் " என்றேன்..

அவள் மெல்ல கேட்டாள்,
" தினமும் இந்த பேருந்து நிலையத்திற்கு,
வந்துதான் செல்வாயா ? "

" ஆமாம் " என்றேன்..

" அப்படியானால் நாளைக்கு ?"
அவள் கேள்வியில்,
ஏனோ நெகிழ்ந்தேன்..

தலையாட்டினேன்..
கை அசைத்து விடை கொடுத்தாள்..

அவள் முகத்தில் இப்போது,
ஒரு மென்சோகம் தாக்கி,
இருந்ததை உணர்ந்தேன்.

அதன் பிறகு,
அந்த பேருந்து நிலையம்,
நான் செல்ல வில்லை..
செல்லும் சூழலும்,
எனக்கு வாய்க்கவில்லை..

மெல்ல என் நினைவுகளில்,
இருந்து அவள் மறைந்தாள்..

பிறிதொரு நாளில்,
அந்த தேசத்தில் இருந்தும்,
நான் விடைபெற்றேன்..

நீண்டதொரு காலம்,
கழிந்த பிறகு,
இந்த நிமிடம்,
அந்த அழகான கணங்களின்,
நினைவுகளில் நான்..

விழியோரம் கண்ணீர் துளி,
ஒன்று,
என் கன்னம் நனைக்கிறது,
இப்போது..

மானசீகமாய்,
இறைவனை வேண்டுகிறேன்,
" அந்த பெண் நலமுடன் இருக்க வேண்டும் இறைவா "

அவள் வாழ்க...

***
பி.கு.
எட்டு வருடங்களுக்கு முன்,
சிங்கபூர் தேசத்தில் நடந்த,
நிகழ்வு இது..

வெள்ளி, 25 ஜூலை, 2014

நிஜம் பேசுகிறேன்


என் சமீப கணங்களில்,
தனிமை நிரம்பி,
வழிகிறது...

**
என்றோ சலசலத்து ஓடிய,
பெரும் ஆற்றின்
மத்தியில்,
வறண்ட கற்களின் மீது,
வெப்பமாய் என் மனது.

**
வெப்பம் வீசியது,
மதிய நேர கடற்கரையும்,
சுடு மணலும்,
இவன் மனம் உணர்ந்து..

**
தீரா பனிப்பொழிவில்,
சிக்கிய உணர்வில்,
இவன் காதல், அற்றை நாட்களில்..

**
பொய்யுரைத்த என்னை,
வெகு ஆழமாய்,
கண்ட என் தந்தை,
சொன்ன வார்த்தைகள்,
பிற்காலத்தில் பலித்தது..

ஆம்,
உருப்படாமல் நான்..

**
சின்ன சின்ன கனவுகள்,
பெரிதாய் வியாபித்து,
சீரற்று போனது,
என் வாழ்வியல்..

**
என்னால்,
யாருக்கும் சுமை,
இருந்திட கூடாதென்று,
நினைத்து வாழ்ந்து,
தீரா சுமையாகி போனேன்,
என் குடும்பத்திற்கு..

**
அடுத்த மாதத்தில்,
நான் இறந்து போனாலும்,
போவேன்..

நிகழ்வுகள் பயமுறுத்துகின்றன..

**
வீழ வீழ,
மெல்ல தனித்து விடப்பட்டேன்.

**
அவ்வப்போது,
என் நினைவுகளில் அவள்,
வருவாள்..

என் குழந்தை,
என் நினைவுகளை கலைத்து,
விடுகிறான்..

பிரிவுதிர் காலம்


** பிரிவுதிர் காலம் **

விட்டு விலகி,
சென்றாலும்,
நினைவுகள் விலகிடுமா,
பெண்ணே...

தீரா வலி ஒன்றை,
பரிசாய் தந்து,
சென்றுவிட்டாய் சலனமற்று...

**
பிரிந்தாலும் கூட,
என் கனவு உலகின்,
தேவதைதான்,
இன்னமும் நீ...

**
காலம் காலமாய்,
வலி சுமந்து கொண்டுதான்,
இருக்கிறார்கள்,
காதலன் என்ற ஆண்கள்..
இன்று, நானும் கூட..

**
இருளான பொழுதில்,
வெளிச்சம் தந்து,
பிறகு,
விடியல் நேரத்தில்,
இருள் தந்து மறைந்தது,
ஏனோ பெண்ணே..

**
இன்னமும்,
உன் நினைவுகளை,
சுமந்து திரிகிறேன்..
இந்த சுமை,
என் ஆயுள் தீரும் வரை,
தொடரும்..

**
அடுத்த பிறவி,
என்பது நிச்சயமில்லை.
இந்த பிறவியில்,
நான் கொடுத்து வைக்கவும் இல்லை.

**
பெண்ணே,
எங்கிருந்தாலும் வாழ்க..
இது,
என் மனதிலிருந்து,
வெளிப்பட்ட வார்த்தைகள்..

என் அந்திமம்,
வரையிலும்
இந்த வார்த்தைகள் ஒலிக்கும்.

அவள்...


படபடவென்று,
உடல் நடுங்கியது..
உடல் அனலாய்,
கொதிக்கிறது..

ஓயாத உழைப்பை,
சுமக்கிற உடல்,
சற்றே ஓய்வு,
வேண்டும் என்று,
கதறுகிறது..

படுக்கையை விட்டு,
எழுந்தேன்..

ஜன்னலை திறந்தேன்,
அருகிலிருந்த,
மரத்தின் கிளை,
ஒன்றில்,
அருகி வரும்,
சிட்டு குருவி ஒன்று,
நனைந்த உடலோடு,
அமர்ந்திருந்தது..

மழை இப்போதுதான்,
விட்டிருக்கும் போல்..

ஈரம் உள்வாங்கி,
மினுமினுத்தது பூமி..

மெல்ல நடுக்கம்,
அதிகரிக்க மீண்டும்,
படுக்கையில் வீழ்ந்தேன்.

காய்ச்சல் அனலாய்,
கொதித்தது..
மருத்தவரிடம் செல்ல,
வேண்டும்..

சிறை வாழ்க்கையை,
விட கொடிய,
சிறைக்குள் நானும்,
தனிமையும்..

பல நேரங்களில்,
தனிமையை துரத்திவிடுகிரார்கள்..
இருக்கும் சில நேரங்களில்,
மட்டும் தனிமை,
துணை..

இந்த பூமி,
இந்த வாழ்வியல்,
விசித்திரமாக தோன்றியது.

எல்லாரும் பிறக்கிறார்கள்,
பணக்காரனாக,
ஏழையாக,
சமவெளி பகுதிகளில்,
குளிர்பிரதேசங்களில் ,
என்று..

நானும் பிறந்தேன்,
இந்த நெருக்கமான,
தெருவில்,
அதுவும் பெண்ணாக..

அதுவும் தகப்பன்,
எவனோ தெரியாது..

என் தாய் இங்குதான்,
இருந்தாள்..

என் குழந்தை பருவத்தில்,
என் தாய்,
மிகவும் வேதனை கலந்த,
ஒரு வாழ்க்கையை,
அனுபவித்து கொண்டிருந்தாள்..

தினம் தினம்,
புதிது புதிதாய்,
ஆண்களை சந்திக்கும்,
வேலை..

எனக்கு பருவ,
வயது எட்டியதாக,
ஒரு நாள்,
கூறினார்கள்,
சிலர்..

எனக்குள் இருந்த,
மழலை குணத்தை,
அவர்கள் உணரவில்லை.

என் தாய்க்கு,
விடுதலை,
கொடுத்தார்கள்..

தொடர்ந்த விடுதலையில்,
இந்த பூமியை,
விட்டும் சென்றுவிட்டாள்,
என் தாய்.
எனக்கு தொடர்ந்தது,
இந்த வேதனை,
வாழ்க்கை.

உடல் வலிக்கிறது,
தாயின் மடி மீது,
படுத்து அரற்ற வேண்டும்,
போலிருக்கிறது..

நினைப்பதெல்லாம் நடந்திட,
நான் சாதாரண பெண்ணில்லை.
இரக்கமற்ற, ஆண்களின்,
பசி தீர்ப்பவள்.

உண்மையில்,
யாருமில்லைதான்,
எங்களை போன்றவர்களுக்கு.

அரசாங்கமும் இல்லை,
சக மனிதர்களும் இல்லை.
நாங்கள் ஒரு இச்சை பொருள்..

இனி,
இன்று எவன் எவனோ,
என்னை ஆள போகிறான்.

நான் உணர்வின்றி,
கிடக்க போகிறேன்..

இயலாமை ஒன்று,
என் உதட்டோரம்,
வெறுமை புன்னகையாய்,
குடி கொண்டது.

** கனவுகள் **

ஆழ்ந்த உறக்கம்,
ஒன்று எதிர்பாரா பரிசாய்,
சிறிய இடைவேளைக்கு பின்,
கிடைத்தது..

சலனமற்ற அமைதியான,
உறக்கம்..

என்னை சுத்தமாய்,
மறந்த ஒரு உறக்கம்,
அது..

அன்று,
வீட்டில் அனைவரும்,
ஊருக்கு சென்று விட,
தனித்து இருந்தேன்..

மிக சிறிய வீடுதான்,
என் வீடு..

மொத்தமே,
சமையலறையும் சேர்த்து,
மூன்று சிறிய அறைகள்தான்..

ஆழ்ந்த நிசப்த,
உறக்கம் மெல்ல,
தடைபட்டது..

என் வீட்டு கதவு,
யாரோ திறக்க முயற்சிக்கும்,
சப்தம்.

இருவரின் பேச்சு குரல்,
கிசுகிசுப்பாய் கேட்டது.

கடிகாரம்,
அதிகாலை இரண்டரையை,
காட்டியது..

சிலீரென்று ஒரு அச்சம்,
உடலெங்கும் பரவ,
கண்களை இறுக மூடியபடி,
அந்த குரல்களை கவனித்தேன்..

ஒன்றும் புரிபடவில்லை..

என் படுக்கை அறை கதவை,
தாளிட முயற்சிக்கிறேன்,
படுக்கையை விட்டு,
எழவும் முடியவில்லை..

ஏதேதோ இறைவன் நாமம்,
சொல்லி கண்களை,
இறுக்கமாக மூடி கொண்ட பொழுதில்,
முன்னறை கதவு திறந்து,
கொண்டது..

இரண்டு உருவங்கள்,
என்னருகில் நின்றன..

பின், அந்த உருவங்கள்,
மெல்ல குளியலறை பக்கம் சென்று,
கை கால் அலம்பும் சப்தம்,
கேட்டது..

ஒரு உருவம்,
இன்னொன்றிடம் ஏதோ,
சொல்லி விடைபெற்று கொள்ள,
இன்னொரு உருவம்,
என் படுக்கையின் கால்மாட்டில்,
அமர்ந்தது..

வினாடிகள் அச்சத்தின்,
பிடியில் வெப்பமாய்,
நகர்ந்தது..

சில விநாடிகள்தான்,
கண்களை மெல்ல திறந்து,
பார்க்கிறேன்,
அந்த உருவம் ஒரு பெண் ஆவி..

ஆனால்,
யாரென்று தெரியவில்லை..

சட்டென்று,
என் கால் பிடித்து,
வாயிலும் வயிற்றிலும்
அடித்து கொண்டு
கதறி அழ ஆரம்பித்தது.

அவ்வளவுதான்,
வியர்த்து எழுந்து,
உடை மாற்றி,
பதட்டத்தோடு என் இருசக்கர,
வாகனம் எடுத்து,
அருகில் உள்ள பேருந்து,
நிலையம் விரைந்தேன்..

அந்த இருளான,
பின்னிரவில், பேருந்து நிலையத்தின்,
மக்கள் நடமாட்டம் கண்ட பின்னே,
என் படபடப்பு அடங்கி,
கண்டது கனவென்று உணர்ந்தேன்..

ஒரு தேநீர் பருகி,
என்னை நானே ஆசுவாசப்படுத்தி,
கொண்டேன்..

**
இரு வருடங்களுக்கு முன்,
நிகழ்ந்த கனவு இது.
கனவின் பின்னணி காட்சிகளும்,
நிஜத்தின் பின்னணி காட்சிகளும்,
ஒன்று போலவே இருந்ததுதான் பெரும் வியப்பு

" உன்னை தொடர்கிறேன்"

உன்னை விரும்பி,
உன்னை தொடர்கிறேன்,
தினம்..

இந்த வினாடியில்,
இந்த உலகில்,
உன்னை மட்டுமே,
விரும்புகிறேன்..

*
அவளுக்கு என்னை பிடிக்கும்,
என்பதை நானறிவேன்..

அவள்,
நடிக்கிறாள் என்பதையும்,
நானறிவேன்..

**
மழையில்,
நனைய பிடிக்கிறது,
உனக்கு குடை பிடித்தபடி..

**
குளிர் தென்றல்,
சாமரம் வீச,
விஸ்தாரமான பச்சை புல்வெளி,
காதல் உணர்வுகளால்,
திளைக்கிறது,
நம் காதல் கணங்களில்..

**
உனக்காக காத்திருக்கையில்,
இந்த விஸ்தாரமான,
பச்சை புல்வெளியின்,
நிசப்தம் கூட,
காதல் பேசுகிறது,
என்னில்..

**
தூர தெரிந்த,
இரு விண்மீன்களில்,
நான் ஒன்றாய்,
நீ ஒன்றாய்,
கண்சிமிட்டும்,
நம் காதல் கனவுகள்,
இதம்.. பெண்ணே.

**
என் இதயம்,
என்பது,
உன் பிம்பம்,
சுமப்பது..

**
எத்தனை தொலைவில்,
நீ இருந்தாலும்,
என் உணர்வுகளில்,
நீ வெகு அருகாமையில்தான்,
இருக்கிறாய்.. எந்நேரமும்..

**
உன்னை பார்த்ததும்,
படபடக்கும்,
என் உணர்வுகளை,
காதல் என்றுதான்,
உணர்கிறேன்..

**
மெல்ல நீ,
விடை பெறுகையில்,
என் கனவுகள்,
தீர்ந்து,
விடியலும் துவங்கி விடுகிறது.

**
உன் மீது விழுந்து,
சிதறும்,
மழை துளிகளோடு,
நானும்,
பரவசமாய் சிதறுகிறேன் .

வியாழன், 24 ஜூலை, 2014

ரசனை


ரசனைகள் அற்ற மனிதன்,
எங்குமில்லை..

எனக்குள் இருக்கும்
சின்ன சின்ன ரசனைகள்,
என் இடர் பயணத்தை,
சற்றே ஆசுவாசப்படுத்தி,
கொள்கின்றன..

அப்படி,
இங்கே என் ரசனைகளில்,
சில..  
*****************************
இருள் பிரியா அதிகாலையின்,
நிசப்த சாலைகளில்,
என் நடை பயணம் இதம்..

மலை பாதையில்,
மழை சாரலில்,
தோழியின் கரம் பற்றி,
திரிதல் பிடிக்கும்..

சாலையோர தேநீர் கடைகளில்,
சுடசுட தேநீரோடு,
செய்திகள் படிக்க,
பிடிக்கும்..

என்னை பரவசத்தில்,
ஆழ்த்துபவை,
விரிந்த வானமும்,
பச்சை பள்ளத்தாக்கும்...

எனக்குள் ஒரு உரையாடலை,
நிகழ்த்தி கொண்டே,
கற்பனை வீதியில்,
இரவு நேர பயணம் பிடிக்கும்...

காதல் பொழுதுகளில்,
அவள் என் தோள் சாய்ந்து,
பேசும் காதல் வினாடிகள்,
நிரம்ப பிடிக்கும்...

மனம் நிறைய கேள்விகளை,
சுமந்து நிற்கும்,
மழலைக்கு பதில் சொல்ல,
பிடிக்கும்...

பேரன்பு பேசி,
இந்த தேசத்தில் குறுக்கும்,
நெடுக்குமாய்,
பயணிக்க பிடிக்கும்..

கனவுகள் பிடிக்கும்,
அதில் கவிதை படித்தல்,
மிக பிடிக்கும்..

என் மரணம் அழகானது,
அமைதியானது என்று,
கற்பனை செய்வதில்,
அலாதி பிரியம்...

ஏனென்று தெரியாது,
ஏதற்கோ ஏக்கம் கொள்ளும்,
வினாடிகள் பிடிக்கும்...

நான்,
நானற்று திரிதல்,
மிக பிடிக்கும்.

வென்றாலும், வீழ்ந்தாலும் மகிழ்வே..

ஏதேதோ
கனவுகளை வளர்த்தபடி,
திரிகிறோம் இளமையில்...

கனவுகள் பலிக்கிறது,
சிலருக்கு..

பலருக்கு விரக்தி,
பரிசாய் கிடைக்கிறது..

கனவுகள் பலித்த பலர்,
விரக்தியை கேலி செய்வதுதான்,
உச்சகட்ட வருத்தம்,
அவமானம் எல்லாம்..

தெளிந்த நீரோடை,
போன்றொரு மனதை,
வைத்து கொண்டு,
இதையெல்லாம் கடப்பது,
சுலபம் அல்ல..

ஆனாலும்,
கடந்துதான் ஆக வேண்டும்.

என்ன ஒன்று,
சிலருக்கு விரைவில்,
ஞானம் கிடைத்து விடும்..

பலருக்கு,
இந்த விரக்தியின் சுவடில்,
இருந்து வெளிவரவே,
பல வருடங்கள் பிடிக்கும்...

என்னை பொறுத்தவரை,
இளமை தீர்த்துவிட்டேன்,
விரக்தியின் உச்சத்தில்..

இனி இழப்பதற்கும்,
இறப்பதற்கும் ஒன்றும்,
இல்லை..

மனம் மெல்ல,
தெளிந்து வருகிறது,
இப்போது..

இனி,
மீண்டும் ஒரு பெரு,
முயற்சியில்,
உயரம் நோக்கி...

இனி,
வென்றாலும்,
வீழ்ந்தாலும்
மகிழ்வே..

புதன், 23 ஜூலை, 2014

கிறுக்கல் வரிகள்.. என்னிலிருந்து

** என்னிலிருந்து **

மெல்ல மெல்ல,
தீப்பற்றி எரிகிறது,
முன்னிரவு பொழுதுகளின்,
காதல்..

**
தொட்டு பார்க்க,
பேராசை..
மனிதன் தீட்டு,
என்பது போல,
பார்க்கிறது,
அந்த பேரழகு சிலை..

**
காதல் கனவுகளில்,
மெல்லிய இசைக்கு,
முதலிடம்..

**
மெல்ல வடிந்து போகிறது,
உற்சாகம்,
பால்யம் தீர்கையில்..

**
பட்டியலிட்டது குழந்தை,
தகப்பனிடம்,
பழங்களும்,
சாக்லெட்டுகளும்,
பொம்மைகளும்..

**
உனக்கு தெரியுமா,
நான் யாரென்று,
அல்லது,
நீ யாரென்று..

**
மனம் நிறைய,
கனவுகளோடு,
உற்சாகமாய்
உழைத்து திரிந்தவனை,
வீழ்த்தியது,
காதல்....

**
விதி விட்ட வழி,
அல்ல,
சோம்பல் விட்ட வழி,
பாதாளம்.

தேவதைகள், வருவதும் போவதுமாய்....

காதல் தீண்டாதவனாய்,
இருந்தும் கூட,
இந்த மனதுக்குள்ளே,
ஓராயிரம் காதல்,
கனவுகள்..

தேவதைகள்,
வருவதும் போவதுமாய்,
இனிக்கும் இளமை,
கனவுகள் இதம்..

குளிர்ந்த இரவுகளில்,
சமீபமாய் கண்ட,
அழகான பெண்ணோடு,
ஒரு வசந்த வாழ்க்கை,
கனவுகள் காண்பது,
இயல்பான ஒன்று..

சிற்சில நாட்களில்,
வேறொரு தேவதை,
வந்ததும்,
பழைய தேவதை,
மனதின் பக்கங்களில்,
இருந்து,
காணாமல் மறைந்திடுவாள்.

இந்த,
காதல் கனவுகளில்,
அழகான உணர்வுகள்,
பரிசாய் கிடைக்கும்,
கூடவே,
என் போன்ற கிறுக்கல்,
கவிஞனுக்கு,
காதல் வரிகள் பரிசாய்,
கிடைக்கும்..

அப்படி,
என் காதல் வரிகள்,
இடையிடையே,
இங்கே தெளிக்கப்படும்,
" காதல் உலகு " என்ற,
தலைப்பில்..

வழக்கம்போல,
படித்ததும்,
மன்னித்து விடுங்கள்,
என்னை..

நன்றி..

கிறுக்கல் துளிகள்.."உயிர்த்துடிப்பு"


** உயிர்த்துடிப்பு **

நான் மகிழ்ந்திருந்த பொழுதுகள்,
எல்லாமே,
என் நட்புகளோடு இணைந்திருந்த,
பொழுதுகள்தான்..

மறந்தும் கூட காதலிக்காத,
அற்றை இளமை நாட்கள்,
எனக்கு பிடித்தமானவை.

**
சில தனிமை கணங்களில்,
பின்னோக்கி செல்ல துடிக்கும்,
மனது,
பல ஒப்பீட்டு கணங்களில் முன்னோக்கி,
சென்றிட துடிக்கிறது..

**
தேடல் கிடைத்ததும்,
வெகுவாய் மகிழ்கிற மனது,
தேடல் நீர்த்து போனால்,
வெகுவாய் துயருருகிறது..

**
தீரா சுமையில்,
அல்லாடுகையில்,
கனத்த மௌனம்,
எனக்கு நிரம்ப,
பிடிக்கிறது..

**
சில கணங்களில்,
நான் வெகுவாய்,
மகிழ்கிறேன்.

அது,
மழலையோடு இணைந்த,
கணங்கள்..

**
ஏனோ,
சுமைகளால் கனத்த,
நினைவுகள்,
கனம் குறைந்து,
வெறுமையாய்,
வெற்றிடத்தில் பல நேரங்களில்..

**
வாழ்ந்திட பிரியமாய்,
அவளோடு கனவுகளில்,
இளமை நாட்கள்..
வாழ்ந்திடும் முடிவில்,
அவளின் நினைவுகளில்,
மீதி நாட்கள்..

**
வாழ்தல் பிடிக்கும்,
காரணமின்றி..

**
துயர் காலங்களில்,
பரிபூரண ஆறுதல்,
நிச்சய தேவை,
யாரோ ஒருவரிடமிருந்தும் கூட..

மன்னித்து விடுங்கள்

சட்டென்று,
ஏதாவது ஒரு கணத்தில்,
மனதின் ஒரு,
மூலையிலிருந்து,
சில  வரிகள்,
தோன்றும்..

அவற்றை
அவ்வப்போது எழுதிவிடுவது,
என் வழக்கம்..

அதை சிறந்த,
கவிதையாய் நினைத்து,
மகிழ்வதும் என்
வழக்கம்..

ஆனால்,
மற்றோர் பார்வையில்,
அது பிழையுள்ள கிறுக்கல்களாக,
தெரிவதை,
நான் உணர்ந்திருக்க வில்லை.

அவ்வப்போது,
கவிதை என்ற நினைப்பில்,
என் கிறுக்கல்களை,
இடையிடையே சில பக்கங்களில்,
"கிறுக்கல் துளிகள்"
என்று எழுதிட போகிறேன்..

பெரிய மனது,
கொண்டு,
என் கிறுக்கல் கவிதைகளை,
வாசித்து,
மன்னித்து விடுங்கள்..

மனதின் உள்ளிருந்து..

வாய் விட்டு சிரித்தது,
கடைசியாய் எப்போது,
என்று யோசித்தேன்..

ம்ஹூம்,
நினைவு சிறகுகளுக்குள்,
அகப்படவே இல்லை..

விழிகளில் நீர் கசிய,
வாய் விட்டு எப்போது,
சிரித்தேன் என்று,
தெரியவில்லை..

ஆனால்,
சமீப காலங்களில்,
மனம் விட்டு சிரித்ததை,
விட,
மனம் விட்டு துயரப்பட்டது,
அல்லது,
இறுக்கமாய் இருந்ததுதான்,
அதிகம்..

அதுவும் கடைசி,
ஆறேழு வருடங்களில்,
என் இறுக்கம்,
அதிகம்..

ஏனோ பால்ய வயதுகளின்,
சிரிப்பு பொழுதுகள்,
நினைவுக்கு வந்து,
செல்கிறது இப்போது..

காலம் வேகமாய் விரைய,
வயதும் கூடி செல்ல செல்ல,
ஆனந்த புன்னகை,
என்பது,
எட்டா உயரத்தில்தான்,
சென்று விடுகிறது..

மகிழ்வான தருணங்களில்,
கூட,
புன்னகை என்பதை,
நாகரீகம் என்ற பெயரில்,
மௌனமாய் வெளிப்படுத்தும்,
சூழலில் வேறு
இயங்கி கொண்டிருக்கிறோம்..

எதுவோ,
ஆனால் எங்கோ,
விரைந்து கொண்டிருக்கிறோம்..

முற்று புள்ளிக்கு,
மரணம் என்று பெயரிட்டும்,
வைத்திருக்கிறோம்..

சரி,
இறுதியாய் என்று,
வாய் விட்டு,
மனம் விட்டு புன்னகைத்தேன்,
என்று மீண்டும்,
நினைவு சிறகுகளுக்குள்,
செல்கிறேன்..

அகப்படவில்லை..
ஆனாலும்,
நான் சில கணங்களில்,
அல்லது,
சில பொழுதுகளில்,
மிக மகிழ்வாய்,
இயங்குகிறேன் என்று,
உணர்கிறேன்..

அந்த மகிழ்வான,
தருணங்கள்,
அந்த புன்னகை,
வினாடிகள்,
என் மழலை செல்வத்தோடு,
நான் இருக்கும்,
பொழுதுகள்தான்..

இவன்....இவன்,
பிரபஞ்ச வெளியில்,
சூன்ய திசை,
நோக்கி பயணிப்பவன்..

இந்த புவியின்,
மீது என் பயணத்தில்,
இளமை என்றொரு
பருவத்தை முடித்து,
விட்டவன்..

இனி,
தொடரும் பயணத்தில்,
புவியின் எல்லை,
கடந்து,
பிரபஞ்ச வெளியின்,
சூன்யம் நோக்கி,
செல்ல இருப்பவன்.

என்
இதுநாள் வரையிலான,
பயணங்கள்,
என் பார்வைகள்,
என் எண்ணங்கள்,
என்று,
என் மனதுக்குள்,
உலவும் அனைத்தும்,
இங்கே கொட்டிவிட
துடிக்கிறேன்..

காரணம்,
இந்த புவியில்,
பொருளற்ற ஒருவன்,
இவன்..

பொருளற்றதால்,
தனித்து விடப்பட்டவன்.

எனவே,
என் மனதை,
இங்கே தெளிக்கிறேன்,
என் பயணத்தினூடே..

வாசியுங்கள்,
விருப்பமிருப்பின்,
அல்லது,
தனித்து விட்டு விடுங்கள்,
இங்கும்...

நான்,
தொலைந்து போகிறேன்..

நன்றி..