திங்கள், 29 செப்டம்பர், 2014

** என் மனதிலிருந்து... **



*
கனவுகளில்,
உலா வருகின்றன,
மனதின் மத்தியில்,
இருக்கும்,
பிசாசுகள்..

*
அடர் இருளில்,
தொலை தூர,
நிசப்த வெளி ஒன்றில்,
தனித்து விடப்பட்டு,
இருக்கிறேன்..

நான் இதம்..

*
எல்லாம் இழந்த பின்னே,
பரிசாய்,
அடர் தனிமை..

*
அரசியலும்,
பெரு நிறுவனங்களும்,
கை கோர்த்தால்,
அது லாப வேட்டை,
அசுர கொள்ளை வெறி,
ஊழலின் உச்சம்..

*
இழப்பின் சுவடுகள்,
சுவர்களில்,
எதிரொலிக்கின்றன..

என் அறையெங்கும்,
துயர மனது..

*
பேச பிரியமாய்,
பேசிட யாருமற்று அந்திம தனிமை..

*
பெரிதாய் கனவுகள்,
நீர்த்து போகையில்,
தெளிந்து,
ஞானம் பெறுகிறான்,
தத்துவ மனிதன்..

*
ஆழ்ந்து,
உறங்குகையில்,
விடுபடவேண்டும்..

என் கனவுகள்,
பலிக்க,
இறைவன் துணை,
வேண்டும்..

**
காதலற்ற,
பெண் சிநேகமற்ற,
இளமை காலத்தை,
பரிசாய் தந்த,
இறைவனுக்கு நன்றி..

வியாழன், 11 செப்டம்பர், 2014

** என் மனதிலிருந்து சில வரிகள் **


வீழ துவங்கும்,
கணத்திலிருந்து,
தனிமை உடன் வர,
துவங்கும்..

*
பரிசு நிச்சயம்..

பிரிவு துயர் பரிசு,
காதலில்..

*
வானம் தாண்டி,
எங்கோ மறைந்திருக்கிறது,
சொர்க்கம்..

*
அதல பாதாளத்தில்,
வெப்பத்தின் மத்தியில்,
நரகம்..

**
புரட்சி வீரர்கள்,
எல்லாம் பாதியிலே,
மடிந்து போக,
சுயநல அரசியல்வாதிகள் ஆயுள்,
முழுவதும் பிழைக்கிறார்கள்..

**
இந்த காந்தி தேசத்தில்,
சமீபமாய்,
நீதியை விலைக்கு,
வாங்கும் முயற்சியில்,
அதிகார அசுரர்கள்..

**
உள்ளொன்று வைத்து,
புறமொன்று பேசினால்,
அது வஞ்சம் போர்த்திய நட்பு,
என பொருள்படும்..

**
பகுத்தறிவு என்பது,
பிறர் உள்ளம் உணர்வது..

*
பிறன் சூழல் கண்டு,
நகைக்காதே ,
உலகம் உருண்டை..

**
மனம் முழுதும்,
சாய் பகவானும்,
கந்த கடவுளும்...

இனி யாதொரு,
அச்சமும் எனக்கில்லை..

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

தேவதையின் கதை ( தொடர்ச்சி )


அன்று பள்ளி விடும் நேரத்தில், நல்ல மழை பெய்து கொண்டிருக்க, தேவதை அன்னையின் வரவை எதிர்நோக்கி காத்திருந்தாள்..
வக்கிர மனது தொடர்ந்து தேவதையை கவனித்தபடி, நெருங்க ஆரம்பித்தது..
நல்ல வேளையாக, மிக சரியாக தேவதையின் அம்மா வந்துவிட, உஷாரான வக்கிர மனது பின்வாங்கியது..

*
மழை விடாது கொட்டி கொண்டிருந்ததால், விளையாட வழியின்றி, வீட்டு பாடங்களை விரைவாகவே எழுதி முடித்தாள்..

இரவு 8 மணி, தகப்பன் வந்து சேர, ஆசை ஆசையாய்   தகப்பனை கட்டி கொண்டாள்..
தகப்பனின் களைப்பு காணாமல் போனது..

தகப்பன் குளித்து முடித்து விட்டு வந்துவிட, இரவு உணவு தயாராக இருந்தது..
தகப்பனும், மகளும் கலகலவென்று சிரித்தபடி சாப்பிட்டு கொண்டிருக்க, அம்மா நெகிழ்ச்சியோடு பரிமாறி கொண்டிருந்தாள்..
அந்த சிறிய வீட்டில், பேரன்பு சூழ்ந்து கொண்டிருந்தது..
" அம்மா நான் பாத்திரம் கழுவி வைக்கவா ?"
" வேணாம், அப்பகிட்ட பேசிட்டு இரு.. நான் பாத்திரம் கழுவி வைத்துவிட்டு வரேன் "
தகப்பனும், மகளும் பேரன்பில் மிதந்து, கலகலவென்று பேசி கொண்டிருந்தனர்..
" அப்பா, நான் நல்லா படிச்சு, பெரிய வீடு, வானம் வரைக்கும் உசரமா கட்டி தரேன். நானும், நீயும் அம்மாவும் அந்த வீட்டுக்கு போய்டலாம்பா.."
மகளின் கனவுகளை கண்களில் துளிர்த்த நீரோடு ரசித்து கொண்டிருந்தான் தகப்பன்..
" சரி நேரமாச்சு, நீ தூங்கு.. அப்பாவுக்கு களைப்பா இருக்கு.. " என்றபடி, மகளின் கால்களை மெல்ல அழுத்தி விட்டு கொண்டிருந்தான் தகப்பன்.
மகள் மெல்ல தூங்கி போனாள்.. தகப்பனும் உறங்கி போனான்..
பேரன்பு கவசம் ஒன்று அந்த சின்னஞ்சிறு வீட்டை சூழ்ந்து நின்றது..
விடிந்தது, விதி நின்று சிரிக்க துவங்கியது..

**
அன்று காலை, அந்த வீதியில் உள்ள தெரிந்தவர் வீட்டில், ஒரு காதணி விழா..
விழாவுக்கு சென்று விட்டு, பிறகு பள்ளிக்கூடம் அழைத்து செல்லுமாறு, மனைவியிடம் கூறிவிட்டு, மகளிடமும் விடைபெற்று தகப்பன் பணிக்கு சென்று விட்டான்..

சிறய அளவில் கூட்டம் இருந்தது அந்த விழாவில்.. காலை உணவை அங்கயே முடித்து கொண்டு, விருந்தினர்களோடு அளவளாவி கொண்டிருந்தாள் அன்னை..
தேவதை சற்றே உற்சாகமாய், தன் தோழிகளோடு விளையாடி கொண்டிருக்க, அந்த விழா களை கட்ட துவங்கியது. 
வீட்டின் கொல்லை புறத்தில் இருந்த கொய்யா மரத்தில், காய்த்திருந்த கொய்யா கனிகள், இவள் மனதை ஈர்த்தது..

உன்னிப்பாக இவளையே கவனித்து கொண்டிருந்த வக்கிர மனது,
" நான் பறித்து தரவா ?" என்று கேட்டது..

சக தோழிகளிடம், " நீங்கல்லாம் உள்ள போயி விளையாடுங்க, , நான் கொய்யா பழங்களை பறித்து, இவளிடம் தந்து அனுப்புகிறேன்.. " என்றது...

தோழிகள் வீட்டினுள் சென்றுவிட, தேவதையும், வக்கிர மனதும் கொல்லைபுறத்தில்..
" அதோ அங்க கார் நிக்குதுல்ல, அதுல நிறைய பை இருக்கும் அதை எடுத்துட்டு வந்து, கொய்யா பறித்து தரேன்.. நீ உன் தோழிகளிடம் கொடுத்து விடு "  என்றது வக்கிர மனது..
தேவதை உற்சாகமாய், அந்த காரை நெருங்கியது..

வக்கிர மனது கார் கதவை திறந்து விட, தேவதை உற்சாகமாய் உள்ளே ஏறி, பைகளை தேடியது..
கார் சட்டென்று புறப்பட்டது..
" மாமா, எங்க போறோம்.. ?"
" கடைவீதி வரைக்கும் போயிட்டு வந்துடலாம்.. பை பத்தாது போல ?"
" அம்மா திட்டுவாங்க மாமா "

தேவதை பக்கம் திரும்பியது அந்த வக்கிர மனது.. தேவதையின் முகத்தில் கர்சீப் ஒன்றை வைத்து மெலிதாய் அழுத்த, தேவதை மயங்கி போனாள்..

**
சற்றே துணுக்குற்றாள் தேவதையின் தாய் " எங்க போனாள் அதுக்குள்ளே,?'
நேரம் வேகமாய் விடைபெற, பதட்டம் சுமந்து தேட ஆரம்பித்தாள்..
அந்த விழாவில் பதட்டம் கூடியது.. ஆளாளுக்கு தேட ஆரம்பித்தனர்..
தகப்பன் தகவலறிந்து ,கதறியபடி ஓடோடி வந்து, மனைவியை திட்டியபடி, தேட துவங்கினான்..

**
கார், விரைந்து கொண்டிருந்தது.. வியர்த்து போன முகத்தை துடைத்தபடி, வக்கிர மனது காரை வேகமாய் செலுத்தி கொண்டிருந்தது..
சரியாக 5 மணி நேர பயணத்திற்கு பின், சிறிய நகர் ஒன்றில் வேறு இருவர் ஏறிக்கொள்ள, வக்கிர மனது அவர்களிடம் பணம் பெற்று இறங்கி கொண்டது..

முன்னிலும் வேகமாய் புறப்பட்ட கார்,புற நகர் ஒன்றில் நின்றது...அந்த இருவரில் ஒருவன்  மயக்கம் தெளியாமல் இருந்த தேவதையை வேறொரு வாகனத்தில் ஏற்றிட, இன்னொருவன் அந்த வாகனத்தை மும்பையை நோக்கி செலுத்த ஆரம்பித்தான்..

**
இங்கே, தேவதையின் தாய் வெடித்து கிளம்பிய அழுகையோடு, வீதியெங்கும் தேடி கொண்டிருந்தாள்.
தகப்பன், அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்து கொண்டிருக்க, அருகிலிருந்தவர்கள் பதட்டத்தோடு   இன்னமும் தேடி கொண்டிருந்தனர் தேவதையை..

*
மறுநாள், மும்பையை நெருங்கியது கார். மயக்கம் தெளிந்து அழ ஆரம்பித்த தேவதையை, அதட்டி வேறு இருவரிடம் ஒப்படைத்தனர் அந்த இருவர்..

அச்சத்தில் இருந்த தேவதையை தூக்கி சென்றனர், சிகப்பு விளக்கு பகுதிக்கு..
( முற்றும் )

**
(( இது ஒரு கற்பனை கதை என்றாலும், நாள்தோறும் நம் நாட்டில் நடக்கின்ற  துயர நிகழ்வு இது..
நம் தேவதையை போன்ற எண்ணற்ற சிறுமிகள், நாள்தோறும் வக்கிர மனது கொண்ட கயவர்களால் கடத்தி செல்லப்பட்டு, மோசமான சூழல் உள்ள இடங்களில் விற்று விடுகின்றனர்..
அரசாங்கம், பெரிதாய் நடவடிக்கை எடுப்பதில்லை என்பதே உண்மை..
பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது..
பெற்றோர்களே கவனம்..))

திங்கள், 8 செப்டம்பர், 2014

தேவதையின் கதை

சின்ன சின்ன துளிகள், பெரு மழை ஒன்றின் அறிவிப்பை சுமந்து வர,
" அப்பா, அப்பா ப்ளீஸ் பா, கொஞ்சமா நனைஞ்சுட்டு வரேன் ப்ளீஸ் பா " அவள் கெஞ்சலில்,
தகப்பன் சற்றே இறங்கி வந்தான்..

" ஜலதோஷம் பிடிச்சுக்கும், அப்புறம் ராத்திரிக்கு தூக்கம் வராது "
" அப்பா, ப்ளீஸ், ஒரு தடவ மட்டும் "
சட்டென்று தகப்பன் பதிலை எதிர்பார்த்திராமல்,
சிறு தூறலில், கை விரித்து  உடல் நனைத்து, மகிழ்ச்சி பொங்க,
மீண்டும் வீட்டினுள் நுழைந்தாள்..

அது ஒரு ஒட்டு வீடு..
நகரத்தில் இருந்து சற்றே உள்ளடங்கிய ஒரு கிராமம் அது..

அவள்.. கயல்விழி.. வயது ஆறு..
தகப்பன் பாலகுமாரன், ஒரு சிறு தொழிற்சாலையில் லேத் ஆபரேட்டராக வேலை செய்கிறார்..
தாய் வித்யா. சிறு குடும்பம்..
வறுமை அவ்வப்போது எட்டி பார்த்தாலும், தகப்பனின் அயராத உழைப்பில் குடும்பம் நகர்ந்தது..
மகிழ்வும் நீடித்தது..
இவள் அந்த சின்னஞ்சிறு குடும்பத்தின் தேவதை..

படிப்பில் படு சுட்டி..
அந்த தெருவில் உள்ள அனைத்து,
வீடுகளுக்கும் தேவதை இவள்..

இவளின் சின்ன சின்ன குறும்புகளில்,
பெரியவர்களின் துயரம் கரைந்திடும்..

தாயை விட, தகப்பனின் மீது ஒட்டுதல் அதிகம்.
" அப்பா, அம்மா எப்போ பார்த்தாலும் திட்டிட்டே இருக்காப்பா.. எனக்கு உன்னதாம்பா ரொம்ப பிடிக்கும்.."
" அம்மாவுக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும்டா. நீ தப்பு பண்ணாம, அம்மா சொல்றத கேட்டு பாரு, அம்மா உனக்கு வேணும்ங்கறத வாங்கி தருவா "
சற்றே முகம் சுனுங்கி, "போப்பா "
அவள் வாட்டம் கண்டு, தகப்பன் சற்றே இளகி போனான்..

தகப்பனுக்கும், பிஞ்சு மகளுக்கும் இருக்கும் ஒட்டுதல், ஒரு பாசம், உலகில் வேறு எந்த பாசத்தையும் விட உயர்வானது..
அது ஒரு ஆழமான, தூய பிணைப்பு.. 
அன்று ஒரு விடுமுறை நாள்,
தொலைக்காட்சியில் ஏதோ ஒரு படம் ஓடி கொண்டிருந்தது.
" அப்பா, கடல்ல எவ்ளோ தண்ணி இருக்கும் ?"
மகளின் கேள்வியை ரசித்த தகப்பன்,
" நிறைய இருக்கும், கடல் ரொம்ப பெரிசு "
தகப்பனின் பதில் அவளுக்கு திருப்தி தரவில்லை, என்பதை தகப்பன் உணர்ந்தான்..

" சரி, நாம ஒரு நாள் கடலுக்கு போலாம்.. சரியா "
கண்கள் விரிய,
"நிசமாவாப்பா, எப்போ போலாம் ?"
" உனக்கு, கால் பரீட்சை லீவுல நான் கூட்டிட்டு போறேன்.."

தகப்பனின் கால்களை இறுக கட்டி கொண்டாள்..
அவளுக்குள், கடல் கனவுகள் விரிய ஆரம்பித்தது..

தகப்பன்,தனக்குள் கணக்கு போட்டு கொண்டிருந்தான்..
இவன் கிராமத்திலிருந்து, கடல் 6 மணி நேர தொலைவில் இருந்தது.
போக வர ஆகும் செலவுகளை கணக்கிட்டு,
அதற்கு ஓவர்டைம் கணக்குகளை மனதுக்குள் போட்டு கொண்டிருந்தான்..

வாக்கு கொடுத்தாயிற்று மகளுக்கு.. நிறைவேற்ற வேண்டும்..

மனைவியின் முகத்தை பார்த்தான். அவளுக்குள்ளும் மகிழ்ச்சி பூத்திருப்பதை  உணர்ந்து கொண்டான்..

இன்னும் மிக சரியாக ஒரு மாதம் உழைக்க வேண்டும்..
மகளுக்கும் கால் பரீட்சை முடிந்து விடும்..

தகப்பன், மகளின் கனவுகளுக்காக, முன்னெப்போதையும் விட,
அதிகமாய் உழைக்க துவங்கினான்..
வியர்வை படிந்த சட்டையில், இரவு வெகு நேரம் கழித்து,வீடு வந்த கணவனை,கண்டதும், ஏனோ விழிகளில் கண்ணீர் தேங்கி நின்றது.

" கயல் எங்க? "
" அவ தூங்கிட்டா, ரொம்ப நேரம் அப்பா வரலையான்னு கேட்டுட்டே இருந்தா. அப்புறம் தூங்கிட்டா "
" என்ன பண்ண, ஓவர் டைம் பார்த்தாதான், அவள் ஆசைப்படி, கடல் பார்க்க போகமுடியும்."
" அதுக்காக இப்படியா, கஷ்டப்படுவீங்க.. எனக்கு பயமா இருக்குங்க. உங்களுக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா,?"
மனதால் உடைந்து அழுத மனைவியை தேற்றினான்..
" அசடு, எதுவும் ஆகாது, இந்த பிறவில எனக்கு உறவுன்னு, நீயும் என் மகளும்தான்.. நீங்க 2 பேரும்தான் என் உலகம், கண்ண துடைச்சுக்க.."
இவன், குளித்து விட்டு, இரவு உணவை முடித்தபோது, மணி அதிகாலை ஒன்று..
அசதியில் உறங்கி போனான், அன்பு மகளின் உறக்கம் ரசித்தபடி..

 *
தகப்பன் அதீத உழைப்பிலும், மகளின் அதீத ஆர்வத்திலும் நாட்கள் வேகமாய் கரைந்திட, அந்த கடல் நாளும் வந்தது.
அது, கன்னியாகுமரி ...
இரவு பேருந்தில் இடம் பிடித்து, கன்னியாகுமரி வந்து சேர்ந்த பொழுது, அதிகாலை மணி 4...
புதிய இடம், புதிய காற்று, ஆர்ப்பரிக்கும் அலையோசை சேர்ந்து கயல்விழி மனதை குதூகலமிட செய்தது..
இரவு இன்னும் நீடித்திருக்க  , வெண்ணுரை பொங்கி ஆர்பரித்த அலைகள், அவளுக்கு பிரமிப்பை கொடுத்தது..
" கயல் இந்த பக்கமா வா, " தகப்பனின் கை பிடித்தபடி உற்சாகமாய் பின் தொடர்ந்தாள்..

ஈர அலைகள், கால் நனைக்க, பாதுகாப்பாய் தகப்பன் கரம் பற்றி நின்றுகொண்டாள்..
சூர்யோதயத்திர்க்காக கூட்டம் காத்திருந்தது..
சற்று நேரத்திற்க்கெல்லாம், செக்க செவேலென கதிரவன் இருள் கிழிக்க, பெரும் பரவச உணர்வில் கயல், கடலலை போல ஆர்ப்பரித்தாள்..
கேள்விகள் கேள்விகள் பல பல, அவள் மனதில் உதித்து கொண்டே இருக்க, தகப்பன் பொறுமையாக பதில் கூறி கொண்டே வந்தான்..

" இங்க பகவதி அம்மன் கோவில் இருக்கு, போய் சாமி கும்பிட்டுட்டு பிறகு கடல் வந்து பார்க்கலாம் சரியா "
தகப்பனின் சொல்லுக்கு பணிந்து பின் தொடர்ந்தாள்.
தகப்பன், அவள் மனதில்  உயர சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தார்  ..

பகவதி அம்மனிடம், கண்மூடி தியானித்தாள், " கடவுளே, என் அப்பா, என் அம்மா நல்லாருக்கணும், என் பிரண்ட்ஸ் நல்லாருக்கணும்.. என் பக்கத்துக்கு வீட்டு கவுசி அத்தை, திவ்யா பாப்பா எல்லாரும் நல்லாருக்கணும்.." கயல் வேண்டுதல் தொடர்ந்தது..
கோவிலை விட்டு வந்து, மீண்டும் கடற்கரை...
கயல் குதூகலத்தில், தகப்பனும் தாயும் உற்சாகமாய் இருந்தனர்.
அந்த வினாடி, இறைவன் அவர்களை ஆசிர்வதித்து கொண்டிருந்தார் போலும்..
குதூகலம் தொடர, விவேகானந்தர் பாறைக்கு, படகில் பயணம் துவங்கியது..
தள்ளாட்டம் போட்டபடி நகர்ந்த படகை சற்றே அச்சம் கலந்த பரவசத்தோடு கயல் பயணித்தாள்..
வானுயர நின்ற திருவள்ளுவர் சிலையை ரசித்தாள்..

மீண்டும் கடற்கரை குதூகலம் என தொடர்ந்தது.. மதியம் தீர்ந்து மாலை வர துவங்கிய பொழுதில்,
தனக்கு வேண்டிய பொம்மைகளை வாங்கி கொண்டு பேருந்தில் அமர்ந்தாள்.
" இன்னொரு தடவை வரலாம்ப்பா "
" முழு பரீட்சை லீவுல கூட்டிட்டு வரேன்.. சரியா ?"
" ம்ம்."

வீடு திரும்பி, இரண்டு தினங்களாகியும், இன்னும் கடலும், கடலலைகளும் அவள் மனதை விட்டு அகலவில்லை.
விடுமுறை முடிந்து, பள்ளி திறந்தது..
வழக்கம்போல நாட்கள் நகர்ந்தது..

*
அடுத்து, தீபாவளி பண்டிகை அறிவிப்புகள் வர, கடல் சற்றே மறந்து போனது..

தீபாவளி வெகுவாய் நெருங்கி கொண்டிருந்தது..
இன்னும் 2 தினங்களில் தீபாவளி..
எதிர்வீட்டில் தீபாவளி களை கட்டியது..
இவள் மனதில் சிறு ஏக்கம்.

பணிக்கு சென்ற தகப்பன் வரவை நோக்கி,
கண்கள் விரிய காத்திருந்தாள்..

அதீத களைப்புடன், தொழிற்சாலையில் பணிமுடித்து,
இவளுக்கு வேண்டிய புது துணிகள், பட்டாசுகள்,
வாங்கி வீடு வந்து சேர்ந்தான் தகப்பன்..

இவள், தகப்பனை ஆசை தீர கட்டி கொண்டாள்.
இவள் அன்பில் தகப்பனின் களைப்பும் காணமல் போனது..

தொடர்ந்த சந்தோஷத்தில், வீட்டில் தீபாவளி களை,
கட்ட துவங்கியது..

நாட்கள், மகிழ்ச்சியாக நகர துவங்கிய பொழுதில்,
எதிர்பாரா ஒரு நாளில் விதி சிரிக்க துவங்கியது...

ஒரு நல்ல மழை நாளில், அம்மாவுடன் குடைக்குள் புகுந்து, வழக்கம் போல பள்ளிக்கூடம் புறப்பட்டாள்..
வழியில், ஏதேச்சையாய் ஒரு வக்கிர மனதின் தீய பார்வை தேவதையின் மீது விழுந்தது..
**
( அடுத்த பதிவில் முற்றும் )
 

வியாழன், 4 செப்டம்பர், 2014

** நினைவுகள் **


எண்பதுகளில் ஓர் நாள்..
பள்ளி பருவத்தின் மத்திம நாட்கள்..
அழகிய மலை மாவட்டத்தில்,
ஒரு கிறித்துவ பள்ளியில்,
தமிழ் வழி கல்வி பயின்று வந்தேன் ..

அந்த பள்ளியில்,
அனைவரும் ஆசிரியைகள்..

கண்டிப்பான, அதே சமயம்,
உண்மையான தூய உள்ளம் கொண்ட ,
ஆசிரியைகள் அவர்கள்..

எட்டாம் வகுப்பு வரை,
இருந்த அந்த பள்ளியில்,
நன்னெறி வகுப்புகள் இல்லாமல்,
ஒவ்வொரு நாளும் பாடம் துவக்கியதில்லை..

எட்டாம் வகுப்பு வரை படித்த,
அந்த பள்ளியில்,
ஒவ்வொரு வகுப்பிலும்,
எங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த ,
ஆசிரியைகளை மறக்கவே முடியாது..

அதில்,
ஏழாம் வகுப்பு ஆசிரியை அவர்களை,
மறக்கவே முடியாது..

அவருக்கு ரெண்டு குழந்தைகள்,.
மூத்தவன் பள்ளியில் படிக்க,
இரண்டு வயதில், ஒரு கைக்குழந்தை..

அவர் கணவர்,
சிறு உணவகம் நடத்தி வந்தார்..

இங்கு பள்ளியில்,
தினம் நடக்கும் நிகழ்வுகள்,
ஒவ்வொன்றும்,
என் பெற்றோருக்கும் தெரியும்..

அத்தனை உன்னதமாக,
பெற்றோர் ஆசிரியர்,
உறவு இருந்தது.. அன்று..

ஏதாவது பாடத்தில்,
சரியாக படிக்க வில்லையென்றால்,
விடுமுறை நாட்களில்,
ஆசிரியை வீட்டிற்கு செல்ல வேண்டும் ..

அந்த ஆசிரியை வீட்டிற்கு,
அருகிலேயே அவர்கள் உணவகம்,
இருந்தது..
வீட்டில் இருந்துதான் பலகாரங்கள்,
உணவகத்திற்கு செல்லும்..
கூடவே, கைகுழந்தையையும் ,
கவனித்த படி,
எங்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பார்.

அர்பணிப்பு உணர்வுடன்தான்,
பாடம் சொல்லி கொடுப்பார்..
எந்தவித கட்டணமும்,,
வாங்கி கொள்ள மாட்டார்..

தேநீர், பலகாரங்கள் அவ்வப்போது,
எங்களுக்கும் கொடுத்தபடி,
நாங்கள் படிப்பதை,
கவனித்தபடி இருப்பார்..

சரியாக வீட்டுப்பாடங்கள்,
முடித்தபின்தான்,
எங்களை வீட்டிற்கு அனுப்புவார்..

அடியும் விழும்,
அன்பும் இருக்கும்..
அப்படி ஒரு அர்பணிப்பு ஆசிரியை,
அவர்..
அவர் மட்டுமல்ல,
அந்த பள்ளியில் அன்றைய,
ஆசிரியைகள் அனைவருமே அப்படித்தான்,
இருந்தார்கள்..

ஒருமுறை,
அந்த ஆசிரியையின்,
குழந்தைக்கு,
உடல் சுகவீனம் காரணமாக,
மருத்துவமனையில்,
அனுமதிக்கபட்டிருந்தது...

நாங்கள் சிறுவர்கள்,
இருந்தாலும்,
ஆசிரியையின் மகனை,
பார்க்க,
மருத்துவமனைக்கு செல்ல,
முற்பட்டோம் .

தலைமை ஆசிரியையிடம்,
கூறாமல்,
சற்றே தொலைவில் இருந்த,
அந்த மருத்துவமனைக்கு,
பயணப்பட்டோம்..

அரைமணி நேரம் நடந்து,
குழந்தையை பார்த்து விட்டு,
வந்தோம்..

திரும்ப பள்ளிக்கு,
வந்ததும்,
தலைமை ஆசிரியை, மற்றும்,
சில ஆசிரியைகள்,
கையில் பிரம்போடு நிற்க,
வெலவெலத்து போனோம்..

பள்ளி மைதானத்தில்,
முட்டி போட வைத்து,
எங்களிடம் சொல்லாமல் ஏன் சென்றீர்கள்,
என்று அடித்து வெளுக்க ஆரம்பித்தனர்..

பிறகு,
மறுநாள் உங்கள் பெற்றோருடன்தான்,
வரவேண்டும் என்று ஆணையிட,
நாங்கள் பயந்து போனோம்.

பயந்து நடுங்கியபடி,
அடியை எதிர்பார்த்து
என் தகப்பனிடம் கூற,
அவரோ,
'இனிமேல் எங்க போனாலும், தலைமை ஆசிரியையிடம் சொல்லிட்டு,
போகணும்" என்று மட்டும் கூறிவிட்டு அமைதியாக இருந்தார்..

எனக்கு ஆச்சரியம்.. அந்த வயதில் ஒன்றும் புரியவில்லை..

மறுநாள்,
பள்ளிக்கு வந்தேன், என் தந்தையுடன்,
சக மாணவர்களும் அவ்வாறே..

இதில் ஒரு சில மாணவ, மாணவிகளின்
பெற்றோர்கள்,
அங்கேயே தங்கள் பிள்ளைகளை அடித்து துவைத்தனர்.

அந்த நேரம் பார்த்து,
அங்கு வந்த ஆசிரியை,
அழுத அழுகை இன்னும் என் நினைவில்,
இருக்கிறது..

" என் மகனை பார்க்க வந்து,
இப்படி அடி வாங்குகிறார்களே " என்று கதறினார் ..

அந்த அளவுக்கு, எங்கள் மீது பாசம் வைத்திருந்தார் அந்த ஆசிரியை..

பிறகு, பெற்றோர், சம்பிரதாய கடிதம் எழுதி கொடுக்க ,
அந்த பிரச்சினை முடிந்தது ..

பிறகு, ரெண்டொரு நாளில்,
வழக்கம் போல்,
வகுப்புக்கு வந்து,
பாடம் எடுக்க துவங்கியபோது,
சட்டென்று என்னை அழைத்தார்,
" அப்பா , அன்னைக்கு வீட்டுக்கு போய்,, உன்னை அடிச்சாரா " என்று கேட்டார்..
நான் " இல்லை டீச்சர் " என்றதும்,
அவருக்கு மகிழ்வு..
அதேபோல, ஒவ்வொருவரையும் விசாரித்தார்.

காலம் பல கடந்து,
வருடங்கள் உருண்டோட,
கல்லூரி காலங்களையும் முடித்து,
வேலை நாட்களில் இருந்த,
ஒரு நாள்,
அந்த ஆசிரியை அவர்களை,
எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தது..

வருடங்கள் பல ஆனதால்,
என்னை மறந்திருப்பார்,
என்று எண்ணி,
தயங்கி விலக எத்தனித்த போது,
" என்னப்பா, பெரிய மனுஷன் ஆனா,
பேசமாட்டியா ? " என்று கேட்டதும்,
திடுக்கிட்டு நெகிழ்ந்து போனேன்..

பிறகு என் அப்பா, அம்மா, என் குடும்பத்தை,
விசாரித்தார்..
நான் நெகிழ்ந்து போனேன்..

இன்று,
இன்னும் சில காலம் கடந்து,
நினைத்து பார்க்கிறேன்,
அந்த சம்பவத்தை..

" மீண்டும் ஒரு முறை,
மனிதனாய் பிறக்கும் வாய்ப்பு கிடைத்தால்,
அந்த ஆசிரியையிடமே,
நான் படிக்கும் வாய்ப்பை,
அந்த இறைவன் அருள வேண்டும் "

இறைவனை வேண்டுகிறேன்.. இந்த நிமிடம்..