செவ்வாய், 9 செப்டம்பர், 2014

தேவதையின் கதை ( தொடர்ச்சி )


அன்று பள்ளி விடும் நேரத்தில், நல்ல மழை பெய்து கொண்டிருக்க, தேவதை அன்னையின் வரவை எதிர்நோக்கி காத்திருந்தாள்..
வக்கிர மனது தொடர்ந்து தேவதையை கவனித்தபடி, நெருங்க ஆரம்பித்தது..
நல்ல வேளையாக, மிக சரியாக தேவதையின் அம்மா வந்துவிட, உஷாரான வக்கிர மனது பின்வாங்கியது..

*
மழை விடாது கொட்டி கொண்டிருந்ததால், விளையாட வழியின்றி, வீட்டு பாடங்களை விரைவாகவே எழுதி முடித்தாள்..

இரவு 8 மணி, தகப்பன் வந்து சேர, ஆசை ஆசையாய்   தகப்பனை கட்டி கொண்டாள்..
தகப்பனின் களைப்பு காணாமல் போனது..

தகப்பன் குளித்து முடித்து விட்டு வந்துவிட, இரவு உணவு தயாராக இருந்தது..
தகப்பனும், மகளும் கலகலவென்று சிரித்தபடி சாப்பிட்டு கொண்டிருக்க, அம்மா நெகிழ்ச்சியோடு பரிமாறி கொண்டிருந்தாள்..
அந்த சிறிய வீட்டில், பேரன்பு சூழ்ந்து கொண்டிருந்தது..
" அம்மா நான் பாத்திரம் கழுவி வைக்கவா ?"
" வேணாம், அப்பகிட்ட பேசிட்டு இரு.. நான் பாத்திரம் கழுவி வைத்துவிட்டு வரேன் "
தகப்பனும், மகளும் பேரன்பில் மிதந்து, கலகலவென்று பேசி கொண்டிருந்தனர்..
" அப்பா, நான் நல்லா படிச்சு, பெரிய வீடு, வானம் வரைக்கும் உசரமா கட்டி தரேன். நானும், நீயும் அம்மாவும் அந்த வீட்டுக்கு போய்டலாம்பா.."
மகளின் கனவுகளை கண்களில் துளிர்த்த நீரோடு ரசித்து கொண்டிருந்தான் தகப்பன்..
" சரி நேரமாச்சு, நீ தூங்கு.. அப்பாவுக்கு களைப்பா இருக்கு.. " என்றபடி, மகளின் கால்களை மெல்ல அழுத்தி விட்டு கொண்டிருந்தான் தகப்பன்.
மகள் மெல்ல தூங்கி போனாள்.. தகப்பனும் உறங்கி போனான்..
பேரன்பு கவசம் ஒன்று அந்த சின்னஞ்சிறு வீட்டை சூழ்ந்து நின்றது..
விடிந்தது, விதி நின்று சிரிக்க துவங்கியது..

**
அன்று காலை, அந்த வீதியில் உள்ள தெரிந்தவர் வீட்டில், ஒரு காதணி விழா..
விழாவுக்கு சென்று விட்டு, பிறகு பள்ளிக்கூடம் அழைத்து செல்லுமாறு, மனைவியிடம் கூறிவிட்டு, மகளிடமும் விடைபெற்று தகப்பன் பணிக்கு சென்று விட்டான்..

சிறய அளவில் கூட்டம் இருந்தது அந்த விழாவில்.. காலை உணவை அங்கயே முடித்து கொண்டு, விருந்தினர்களோடு அளவளாவி கொண்டிருந்தாள் அன்னை..
தேவதை சற்றே உற்சாகமாய், தன் தோழிகளோடு விளையாடி கொண்டிருக்க, அந்த விழா களை கட்ட துவங்கியது. 
வீட்டின் கொல்லை புறத்தில் இருந்த கொய்யா மரத்தில், காய்த்திருந்த கொய்யா கனிகள், இவள் மனதை ஈர்த்தது..

உன்னிப்பாக இவளையே கவனித்து கொண்டிருந்த வக்கிர மனது,
" நான் பறித்து தரவா ?" என்று கேட்டது..

சக தோழிகளிடம், " நீங்கல்லாம் உள்ள போயி விளையாடுங்க, , நான் கொய்யா பழங்களை பறித்து, இவளிடம் தந்து அனுப்புகிறேன்.. " என்றது...

தோழிகள் வீட்டினுள் சென்றுவிட, தேவதையும், வக்கிர மனதும் கொல்லைபுறத்தில்..
" அதோ அங்க கார் நிக்குதுல்ல, அதுல நிறைய பை இருக்கும் அதை எடுத்துட்டு வந்து, கொய்யா பறித்து தரேன்.. நீ உன் தோழிகளிடம் கொடுத்து விடு "  என்றது வக்கிர மனது..
தேவதை உற்சாகமாய், அந்த காரை நெருங்கியது..

வக்கிர மனது கார் கதவை திறந்து விட, தேவதை உற்சாகமாய் உள்ளே ஏறி, பைகளை தேடியது..
கார் சட்டென்று புறப்பட்டது..
" மாமா, எங்க போறோம்.. ?"
" கடைவீதி வரைக்கும் போயிட்டு வந்துடலாம்.. பை பத்தாது போல ?"
" அம்மா திட்டுவாங்க மாமா "

தேவதை பக்கம் திரும்பியது அந்த வக்கிர மனது.. தேவதையின் முகத்தில் கர்சீப் ஒன்றை வைத்து மெலிதாய் அழுத்த, தேவதை மயங்கி போனாள்..

**
சற்றே துணுக்குற்றாள் தேவதையின் தாய் " எங்க போனாள் அதுக்குள்ளே,?'
நேரம் வேகமாய் விடைபெற, பதட்டம் சுமந்து தேட ஆரம்பித்தாள்..
அந்த விழாவில் பதட்டம் கூடியது.. ஆளாளுக்கு தேட ஆரம்பித்தனர்..
தகப்பன் தகவலறிந்து ,கதறியபடி ஓடோடி வந்து, மனைவியை திட்டியபடி, தேட துவங்கினான்..

**
கார், விரைந்து கொண்டிருந்தது.. வியர்த்து போன முகத்தை துடைத்தபடி, வக்கிர மனது காரை வேகமாய் செலுத்தி கொண்டிருந்தது..
சரியாக 5 மணி நேர பயணத்திற்கு பின், சிறிய நகர் ஒன்றில் வேறு இருவர் ஏறிக்கொள்ள, வக்கிர மனது அவர்களிடம் பணம் பெற்று இறங்கி கொண்டது..

முன்னிலும் வேகமாய் புறப்பட்ட கார்,புற நகர் ஒன்றில் நின்றது...அந்த இருவரில் ஒருவன்  மயக்கம் தெளியாமல் இருந்த தேவதையை வேறொரு வாகனத்தில் ஏற்றிட, இன்னொருவன் அந்த வாகனத்தை மும்பையை நோக்கி செலுத்த ஆரம்பித்தான்..

**
இங்கே, தேவதையின் தாய் வெடித்து கிளம்பிய அழுகையோடு, வீதியெங்கும் தேடி கொண்டிருந்தாள்.
தகப்பன், அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்து கொண்டிருக்க, அருகிலிருந்தவர்கள் பதட்டத்தோடு   இன்னமும் தேடி கொண்டிருந்தனர் தேவதையை..

*
மறுநாள், மும்பையை நெருங்கியது கார். மயக்கம் தெளிந்து அழ ஆரம்பித்த தேவதையை, அதட்டி வேறு இருவரிடம் ஒப்படைத்தனர் அந்த இருவர்..

அச்சத்தில் இருந்த தேவதையை தூக்கி சென்றனர், சிகப்பு விளக்கு பகுதிக்கு..
( முற்றும் )

**
(( இது ஒரு கற்பனை கதை என்றாலும், நாள்தோறும் நம் நாட்டில் நடக்கின்ற  துயர நிகழ்வு இது..
நம் தேவதையை போன்ற எண்ணற்ற சிறுமிகள், நாள்தோறும் வக்கிர மனது கொண்ட கயவர்களால் கடத்தி செல்லப்பட்டு, மோசமான சூழல் உள்ள இடங்களில் விற்று விடுகின்றனர்..
அரசாங்கம், பெரிதாய் நடவடிக்கை எடுப்பதில்லை என்பதே உண்மை..
பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது..
பெற்றோர்களே கவனம்..))

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக