சின்ன சின்ன துளிகள், பெரு மழை ஒன்றின் அறிவிப்பை சுமந்து வர,
" அப்பா, அப்பா ப்ளீஸ் பா, கொஞ்சமா நனைஞ்சுட்டு
வரேன் ப்ளீஸ் பா " அவள் கெஞ்சலில்,
தகப்பன் சற்றே இறங்கி வந்தான்..
" ஜலதோஷம் பிடிச்சுக்கும், அப்புறம் ராத்திரிக்கு தூக்கம் வராது "
" அப்பா, ப்ளீஸ், ஒரு தடவ மட்டும் "
சட்டென்று தகப்பன் பதிலை எதிர்பார்த்திராமல்,
சிறு தூறலில், கை விரித்து உடல் நனைத்து, மகிழ்ச்சி பொங்க,
மீண்டும் வீட்டினுள் நுழைந்தாள்..
அது ஒரு ஒட்டு வீடு..
நகரத்தில் இருந்து சற்றே உள்ளடங்கிய ஒரு கிராமம்
அது..
அவள்.. கயல்விழி.. வயது ஆறு..
தகப்பன் பாலகுமாரன், ஒரு சிறு தொழிற்சாலையில் லேத் ஆபரேட்டராக வேலை செய்கிறார்..
தாய் வித்யா. சிறு குடும்பம்..
வறுமை அவ்வப்போது எட்டி பார்த்தாலும், தகப்பனின் அயராத உழைப்பில் குடும்பம் நகர்ந்தது..
மகிழ்வும் நீடித்தது..
இவள் அந்த சின்னஞ்சிறு குடும்பத்தின் தேவதை..
படிப்பில் படு சுட்டி..
அந்த தெருவில் உள்ள அனைத்து,
வீடுகளுக்கும் தேவதை இவள்..
இவளின் சின்ன சின்ன குறும்புகளில்,
பெரியவர்களின் துயரம் கரைந்திடும்..
தாயை விட, தகப்பனின் மீது ஒட்டுதல்
அதிகம்.
" அப்பா, அம்மா எப்போ பார்த்தாலும் திட்டிட்டே இருக்காப்பா.. எனக்கு உன்னதாம்பா ரொம்ப
பிடிக்கும்.."
" அம்மாவுக்கும் உன்னை ரொம்ப
பிடிக்கும்டா. நீ தப்பு பண்ணாம, அம்மா சொல்றத கேட்டு பாரு, அம்மா உனக்கு வேணும்ங்கறத வாங்கி தருவா "
சற்றே முகம் சுனுங்கி, "போப்பா "
அவள் வாட்டம் கண்டு, தகப்பன் சற்றே இளகி போனான்..
தகப்பனுக்கும், பிஞ்சு மகளுக்கும்
இருக்கும் ஒட்டுதல், ஒரு பாசம், உலகில் வேறு எந்த
பாசத்தையும் விட உயர்வானது..
அது ஒரு ஆழமான, தூய பிணைப்பு..
அன்று ஒரு விடுமுறை நாள்,
தொலைக்காட்சியில் ஏதோ ஒரு படம் ஓடி கொண்டிருந்தது.
" அப்பா, கடல்ல எவ்ளோ தண்ணி இருக்கும் ?"
மகளின் கேள்வியை ரசித்த தகப்பன்,
" நிறைய இருக்கும், கடல் ரொம்ப பெரிசு "
தகப்பனின் பதில் அவளுக்கு திருப்தி தரவில்லை, என்பதை தகப்பன் உணர்ந்தான்..
" சரி, நாம ஒரு நாள் கடலுக்கு போலாம்.. சரியா "
கண்கள் விரிய,
"நிசமாவாப்பா, எப்போ போலாம் ?"
" உனக்கு, கால் பரீட்சை லீவுல நான் கூட்டிட்டு போறேன்.."
தகப்பனின் கால்களை இறுக கட்டி கொண்டாள்..
அவளுக்குள், கடல் கனவுகள் விரிய
ஆரம்பித்தது..
தகப்பன்,தனக்குள் கணக்கு போட்டு கொண்டிருந்தான்..
இவன் கிராமத்திலிருந்து, கடல் 6 மணி நேர தொலைவில் இருந்தது.
போக வர ஆகும் செலவுகளை கணக்கிட்டு,
அதற்கு ஓவர்டைம் கணக்குகளை மனதுக்குள் போட்டு
கொண்டிருந்தான்..
வாக்கு கொடுத்தாயிற்று மகளுக்கு.. நிறைவேற்ற வேண்டும்..
மனைவியின் முகத்தை பார்த்தான். அவளுக்குள்ளும்
மகிழ்ச்சி பூத்திருப்பதை உணர்ந்து
கொண்டான்..
இன்னும் மிக சரியாக ஒரு மாதம் உழைக்க வேண்டும்..
மகளுக்கும் கால் பரீட்சை முடிந்து விடும்..
தகப்பன், மகளின் கனவுகளுக்காக, முன்னெப்போதையும் விட,
அதிகமாய் உழைக்க துவங்கினான்..
வியர்வை படிந்த சட்டையில், இரவு வெகு நேரம் கழித்து,வீடு வந்த கணவனை,கண்டதும், ஏனோ விழிகளில் கண்ணீர்
தேங்கி நின்றது.
" கயல் எங்க? "
" அவ தூங்கிட்டா, ரொம்ப நேரம் அப்பா வரலையான்னு கேட்டுட்டே இருந்தா. அப்புறம் தூங்கிட்டா "
" என்ன பண்ண, ஓவர் டைம் பார்த்தாதான், அவள் ஆசைப்படி, கடல் பார்க்க போகமுடியும்."
" அதுக்காக இப்படியா, கஷ்டப்படுவீங்க.. எனக்கு பயமா இருக்குங்க. உங்களுக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா,?"
மனதால் உடைந்து அழுத மனைவியை தேற்றினான்..
" அசடு, எதுவும் ஆகாது, இந்த பிறவில எனக்கு உறவுன்னு, நீயும் என் மகளும்தான்.. நீங்க 2 பேரும்தான் என் உலகம், கண்ண துடைச்சுக்க.."
இவன், குளித்து விட்டு, இரவு உணவை முடித்தபோது, மணி அதிகாலை ஒன்று..
அசதியில் உறங்கி போனான், அன்பு மகளின் உறக்கம் ரசித்தபடி..
*
தகப்பன் அதீத உழைப்பிலும், மகளின் அதீத ஆர்வத்திலும் நாட்கள் வேகமாய் கரைந்திட, அந்த கடல் நாளும் வந்தது.
அது, கன்னியாகுமரி ...
இரவு பேருந்தில் இடம் பிடித்து, கன்னியாகுமரி வந்து சேர்ந்த பொழுது, அதிகாலை மணி 4...
புதிய இடம், புதிய காற்று, ஆர்ப்பரிக்கும் அலையோசை
சேர்ந்து கயல்விழி மனதை குதூகலமிட செய்தது..
இரவு இன்னும் நீடித்திருக்க , வெண்ணுரை பொங்கி ஆர்பரித்த அலைகள், அவளுக்கு பிரமிப்பை கொடுத்தது..
" கயல் இந்த பக்கமா வா, " தகப்பனின் கை பிடித்தபடி
உற்சாகமாய் பின் தொடர்ந்தாள்..
ஈர அலைகள், கால் நனைக்க, பாதுகாப்பாய் தகப்பன்
கரம் பற்றி நின்றுகொண்டாள்..
சூர்யோதயத்திர்க்காக கூட்டம் காத்திருந்தது..
சற்று நேரத்திற்க்கெல்லாம், செக்க செவேலென கதிரவன் இருள் கிழிக்க, பெரும் பரவச உணர்வில் கயல், கடலலை போல ஆர்ப்பரித்தாள்..
கேள்விகள் கேள்விகள் பல பல, அவள் மனதில் உதித்து கொண்டே இருக்க, தகப்பன் பொறுமையாக பதில் கூறி கொண்டே வந்தான்..
" இங்க பகவதி அம்மன் கோவில்
இருக்கு, போய் சாமி கும்பிட்டுட்டு
பிறகு கடல் வந்து பார்க்கலாம் சரியா "
தகப்பனின் சொல்லுக்கு பணிந்து பின் தொடர்ந்தாள்.
தகப்பன், அவள் மனதில் உயர சிம்மாசனமிட்டு
அமர்ந்திருந்தார் ..
பகவதி அம்மனிடம், கண்மூடி தியானித்தாள், " கடவுளே, என் அப்பா, என் அம்மா நல்லாருக்கணும், என் பிரண்ட்ஸ் நல்லாருக்கணும்.. என் பக்கத்துக்கு வீட்டு கவுசி அத்தை, திவ்யா பாப்பா எல்லாரும் நல்லாருக்கணும்.." கயல்
வேண்டுதல் தொடர்ந்தது..
கோவிலை விட்டு வந்து, மீண்டும் கடற்கரை...
கயல் குதூகலத்தில், தகப்பனும் தாயும் உற்சாகமாய் இருந்தனர்.
அந்த வினாடி, இறைவன் அவர்களை ஆசிர்வதித்து கொண்டிருந்தார் போலும்..
குதூகலம் தொடர, விவேகானந்தர் பாறைக்கு, படகில் பயணம் துவங்கியது..
தள்ளாட்டம் போட்டபடி நகர்ந்த படகை சற்றே அச்சம் கலந்த
பரவசத்தோடு கயல் பயணித்தாள்..
வானுயர நின்ற திருவள்ளுவர் சிலையை ரசித்தாள்..
மீண்டும் கடற்கரை குதூகலம் என தொடர்ந்தது.. மதியம்
தீர்ந்து மாலை வர துவங்கிய பொழுதில்,
தனக்கு வேண்டிய பொம்மைகளை வாங்கி கொண்டு பேருந்தில்
அமர்ந்தாள்.
" இன்னொரு தடவை வரலாம்ப்பா "
" முழு பரீட்சை லீவுல கூட்டிட்டு வரேன்.. சரியா ?"
" ம்ம்."
வீடு திரும்பி, இரண்டு தினங்களாகியும், இன்னும் கடலும், கடலலைகளும் அவள் மனதை விட்டு அகலவில்லை.
விடுமுறை முடிந்து, பள்ளி திறந்தது..
வழக்கம்போல நாட்கள் நகர்ந்தது..
*
அடுத்து, தீபாவளி பண்டிகை
அறிவிப்புகள் வர, கடல் சற்றே மறந்து போனது..
தீபாவளி வெகுவாய் நெருங்கி கொண்டிருந்தது..
இன்னும் 2 தினங்களில் தீபாவளி..
எதிர்வீட்டில் தீபாவளி களை கட்டியது..
இவள் மனதில் சிறு ஏக்கம்.
பணிக்கு சென்ற தகப்பன் வரவை நோக்கி,
கண்கள் விரிய காத்திருந்தாள்..
அதீத களைப்புடன், தொழிற்சாலையில் பணிமுடித்து,
இவளுக்கு வேண்டிய புது துணிகள், பட்டாசுகள்,
வாங்கி வீடு வந்து சேர்ந்தான் தகப்பன்..
இவள், தகப்பனை ஆசை தீர கட்டி
கொண்டாள்.
இவள் அன்பில் தகப்பனின் களைப்பும் காணமல் போனது..
தொடர்ந்த சந்தோஷத்தில், வீட்டில் தீபாவளி களை,
கட்ட துவங்கியது..
நாட்கள், மகிழ்ச்சியாக நகர
துவங்கிய பொழுதில்,
எதிர்பாரா ஒரு நாளில் விதி சிரிக்க துவங்கியது...
ஒரு நல்ல மழை நாளில், அம்மாவுடன் குடைக்குள் புகுந்து, வழக்கம் போல பள்ளிக்கூடம்
புறப்பட்டாள்..
வழியில், ஏதேச்சையாய் ஒரு வக்கிர
மனதின் தீய பார்வை தேவதையின் மீது விழுந்தது..
**
( அடுத்த பதிவில் முற்றும் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக