சனி, 26 ஜூலை, 2014

** நினைவுகள் **

** நினைவுகள் **

அந்த,
சீனத்து பெண்,
என்னை வசீகரித்தாள்..

அழகான உதடுகளில்,
சிறு புன்னகை உதிர்த்தபடி,
சிநேகமாய்,
என்னருகே வந்து அவள்,
நின்ற பொழுதில்,
வியர்த்து, படபடத்தேன்..

என் பதட்டம்,
அவளுக்கு பிடித்திருந்தது
போலும்..

நான் அயல் தேசத்தில்,
இருந்த நாட்களில்,
ஒரு விடுமுறை நாளில்,
ஒரு பேருந்து நிலையத்தில்,
நடந்த நிகழ்வு இது..

அந்த சீன பெண்,
நெருங்கி வந்த பொழுதில்,
நிஜமாகவே வியர்த்து,
போனேன்..

அவள் என் பதட்டம்,
ரசித்தபடியே,
பேச துவங்கினாள்,
உடைந்த ஆங்கிலத்தில்..

அவளின் ஆங்கிலத்தை விட,
என் ஆங்கிலம்,
இன்னும் வெகுவாய்,
உடைந்திருந்தது...

"உன் பெயர் என்ன ?" என்று துவங்கினாள்..
என் பெயர் கூறினேன்..
"அப்படி என்றால் என்ன ?" என்றாள்..
"அது ஒரு ஞானியின் பெயர்" என்றேன்..

அடுத்த கேள்வியை வீசினாள்,
சிநேக புன்னகையை உதிர்த்தபடி..
"இங்கே எப்போது வந்தாய் ?"
" இரு மாதங்களுக்கு முன்.." என்றேன்..

"எத்தனை வருடம் இங்கிருப்பாய் ? "
" இரண்டு வருடம்"என்றேன்..

" இந்த தேசம் பிடித்திருக்கிறதா ?" என்றாள்..
" மிகவும் பிடித்திருக்கிறது.." என்றேன்..

மெல்ல, மெல்ல,
அவள் என்னை கவர்ந்தாள்..

" பிறகு ?" என்றாள்..
" என்ன ?" என்றேன்
" இரண்டு வருடம் முடிந்தவுடன்?" என்றாள்..
" இந்தியா சென்று விடுவேன்.." என்றேன்..

" ஏன் இங்கிருக்க பிடிக்கவில்லையா.?"
" இல்லை, இரண்டு வருடம்தான் எனக்கு அனுமதி.. "என்றேன்..

சற்றே மௌனமாய் இருந்து,
பிறகு கேட்டாள், மெலிதாக,
" என்னை பிடித்திருக்கிறதா ?"

நான் ஒரு வினாடி,
யோசித்தேன்..
" பிடித்திருக்கிறது " என்றேன்..

அவள் முகம்,
மலர்ந்ததை கவனித்தேன்..

ஏதோ ஒரு தேசத்தில்,
வேறு வேறு தேசத்தை,
சேர்ந்த நாங்கள்..

உடைந்த மொழியில்,
எங்கள் இருவருக்கிடையே,
ஒரு அழகான பேரன்பு,
மலர்ந்த அந்த வினாடிகளில்,
பேருந்து சரியாக,
வந்து நின்றது..

" சரி நான் வருகிறேன் " என்றேன்..

அவள் மெல்ல கேட்டாள்,
" தினமும் இந்த பேருந்து நிலையத்திற்கு,
வந்துதான் செல்வாயா ? "

" ஆமாம் " என்றேன்..

" அப்படியானால் நாளைக்கு ?"
அவள் கேள்வியில்,
ஏனோ நெகிழ்ந்தேன்..

தலையாட்டினேன்..
கை அசைத்து விடை கொடுத்தாள்..

அவள் முகத்தில் இப்போது,
ஒரு மென்சோகம் தாக்கி,
இருந்ததை உணர்ந்தேன்.

அதன் பிறகு,
அந்த பேருந்து நிலையம்,
நான் செல்ல வில்லை..
செல்லும் சூழலும்,
எனக்கு வாய்க்கவில்லை..

மெல்ல என் நினைவுகளில்,
இருந்து அவள் மறைந்தாள்..

பிறிதொரு நாளில்,
அந்த தேசத்தில் இருந்தும்,
நான் விடைபெற்றேன்..

நீண்டதொரு காலம்,
கழிந்த பிறகு,
இந்த நிமிடம்,
அந்த அழகான கணங்களின்,
நினைவுகளில் நான்..

விழியோரம் கண்ணீர் துளி,
ஒன்று,
என் கன்னம் நனைக்கிறது,
இப்போது..

மானசீகமாய்,
இறைவனை வேண்டுகிறேன்,
" அந்த பெண் நலமுடன் இருக்க வேண்டும் இறைவா "

அவள் வாழ்க...

***
பி.கு.
எட்டு வருடங்களுக்கு முன்,
சிங்கபூர் தேசத்தில் நடந்த,
நிகழ்வு இது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக